வடக்கு - கிழக்கில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட திலீபனின் 37ஆவது நினைவேந்தல்
ஈழத்தமிழர்களின் விடிவுக்காக தன் இன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் வியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வடக்கு - கிழக்கில் (26) உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
அந்தவகையில் தமிழர் தாயகத்தின் தலைநகரான திருகோணமலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவன் கோயில் முன்றலில் தியாக தீபத்தின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து தியாகச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இராவண சேனையினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வில் பலரும் கலந்துகொண்டனர்.
செய்தி- ராகேஸ்
யாழ்ப்பாணம்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வட்டுக்கோட்டையில் இன்று(26) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன் பொழுது தியாக தீபம் திலீபனின் நினைவுருவபடத்திற்கு பொதுச்சுடரேற்றி மலரஞ்சலியுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நாகரஞ்சினி, காரைநகர் பிரதேச சபையின் உபதவிசாளர் விஜயன், முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஜெயந்தன்,அனுசன் ,சசி ,மகளீர் அணியினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி- கஜி
கிளிநொச்சி
இலங்கைத் தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இன்றைய தினம் தியாக தீபம் திலீபனின் 37 வது ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று (27.09.2024) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்தி - யது, எரிமலை
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், இன்றையதினம் (26) யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, இரண்டு மாவீரர்களின் சகோதரியும், முன்னாள் போராளியுமான பெண்ணொருவர் பொதுச்சுடர் ஏற்றினார்.
அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் இரண்டு தூக்கு காவடிகள் நினைவிடத்திற்கு வந்ததுடன், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்தி பவனிகள் வந்திருந்தன.
செய்தி - தீபன்
மட்டக்களப்பு
தியாக தீபம் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி - குமார்
முல்லைத்தீவு
தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவேந்தல் முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வானது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று (26) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
உணர்வெழுச்சியுடன் அஞ்சலி நிகழ்வு
அந்தவகையில் மௌன அஞ்சலியுடன் தொடங்கிய இந் நிகழ்வில், தொடர்ந்து தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றையதினம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளானது இன்றையதினம் புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் இடம்பெற்றிருந்தது.
செய்தி - ஷான்
அம்பாறை
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுஅம்பாறை மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் காரைதீவு அலுவலகத்தில் இன்று (26) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் உறுப்பினர்கள் என பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டுள்ளனர்.
வடக்கு - கிழக்கு
மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து
நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்
அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக
நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக்
களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத்
திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என
ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் (15.09.1987) தொடக்கம் (26.09.1987 )வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ். நல்லூரில் நீராகாரம்
அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி சாவைத் தழுவிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |