புதிய அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் திறமை இல்லாதவர்களுக்கு பதவி வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
வீதியில் இறங்கி போராட்டம்
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு வாக்களித்த ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதற்கு தயங்க போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அமைச்சு செயலாளர்களை நியமிக்கும் போது திறமையற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அதிகாரிகள் புதிய அரசாங்கத்திலும் செயலாளர்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாட்டை தமது சங்கம் இந்த வகையிலும் அனுமதிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அமைச்சுகளை நிர்வாகம் செய்வதற்காக அமைச்சுக்களின் செயலாளர்களை இவ்வாறு நியமித்துள்ளதாகவும், இந்த நியமனங்கள் தொடர்பில் திருப்திக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு நிர்வாகத்தின் பிரதான செயலாளருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும் அவர் மேல் மாகாண பிரதான செயலாளராக கடமை ஆற்றிய காலத்தில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த கணக்காய்வு அறிக்கைகள் உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒருவர் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படுவது பிழையானது என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட சில அமைச்சர் செயலாளர்களின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து தான் நன்கு அறிவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு திறமை அற்றவர்களை மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளமை பாரதூரமான பிரச்சினை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனது நியமனங்களுக்கு பல்வேறு காரணங்களை கூற முடியும் என்ற போதிலும் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் சரியான தீர்மானம் எடுக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள முரண்பாடு தொடர்பில் பாரதூரமான பிரச்சினைகள் நிலவி வருவதாகவும் இதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தல் நடத்தப்பட்டதன் பின்னர் தீர்வு வழங்குவதாக அரசாங்கம் கூற முடியாது எனவும் விரைவில் தமது பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் மீண்டும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.