அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவு கவனயீர்ப்பு போராட்டம்
2026ஆம் ஆண்டு அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்ட வரைவு (L.D.-0.6/2026) தற்போதைய வடிவில் நிறைவேற்றப்படக் கூடாது என வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றைய தினம் (17.08.2026) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட குடிமை சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரைபிற்கு எதிர்ப்பு
இது தொடர்பில் போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுக்காக ஒரு சட்டவரைபினை (என்.ஜி.ஓ. அக்ட்) என்ற சட்டவரைபினை கொண்டுவர இருக்கின்றார்கள். இந்த வரைபினை எதிர்க்கின்றோம், கிராம மட்ட அமைப்புக்களான மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, சனசமூக நிலையம், கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், வயோதிபர் சங்கம், விவசாய சங்கம் என பல சங்கங்கள் கிராம மட்டத்தில் செயற்பட்டு வருகின்றன.

இவ்வாறான அமைப்புக்கள் கிராமத்தில் இருக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் கொண்டுவரப்பட்டால் இவ்வாறான அமைப்புக்கள் அவர்களின் செயற்பாட்டினை செய்ய முடியாத நிலைக்கு தள்ளிவிடும். குறிப்பாக இந்த சட்டவரைபு ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இது நாட்டின் தமிழ், சிங்களம் என இரண்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
பின்னடைவு ஏற்படும்
இது அவசர அவசரமாக ஏன் உருவாக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டில் அனர்த்தம் ஏற்பட்டால் நாங்கள் கிராம அலுவலகர்களுக்கு உறுதுணையாகவே நின்றுள்ளோம். இந்த நிலையில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டவரைபு பொது அமைப்புக்களுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த அரச சார்பற்ற பலதரப்பட்ட அமைப்புக்கள் மற்றும் ஊள்ளுர் அமைப்புக்கள் இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதுடன், போராட்டத்தின் இறுதியில் நீதி அமைச்சுக்கான மகஜர் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக செயலாளர் (காணி) ச.மஞ்சுளாதேவியிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட ஷிரான் பாஸிக் தொடர்பில் திடுக்கிடும் தகவல் : பொலிஸார் விடுத்துள்ள தகவல்கள்






