இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்? வீடுகளில் இருந்தபடி போராட்டம்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று முல்லைத்தீவில், தொடர்ச்சியாக நீதி கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தத்தமது வீடுகளில் இருந்தபடி அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
கோவிட் - 19 பரவல் காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக இவ்வாறு வீடுகளில் இருந்தபடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் பொது இடங்களில் ஒன்றுகூடி பாரிய அளவில் போராட்டங்களை மேற்கொண்டு நீதியை கோரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய நாளில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையிலும் தமது வீடுகளில் நீதி கோரிய வாசகங்களை தாங்கிய வண்ணம் மெழுகுவர்த்தி கொழுத்தி போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
நாங்கள் இலங்கை அரசை நம்பவில்லை சர்வதேச விசாரணையே வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வருவது எப்போது?, உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்?, கால அவகாசம் வேண்டாம் - முறையான நீதி விசாரணையே வேண்டும் போன்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.




