வீதியை புனரமைத்து தருமாறு முல்லைத்தீவு மக்கள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை
முல்லைத்தீவு - முள்ளியவளை கமநல சேவை நிலையப்பிரிவின் கீழான, கணுக்கேணி மேற்கு கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள, ஆவரஞ்சாட்டி பகுதியில் இருட்டுமடுவின் குறுக்காக பாலம் ஒன்றினை நிர்மாணிப்பதுடன் இணைந்த கம வீதியையும் சீரமைத்துத் தருமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கணுக்கேணி மேற்கு கமக்கார அமைப்பு விவசாயிகளின் அழைப்பையேற்று நேற்று (29.03.2026) ஆவரஞ்சாட்டி பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், அப்பகுதி விவசாயிகள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்து ஆராய்ந்தார்.
இதன்போதே இருட்டுமடுப் பாலத்தை நிர்மாணிக்குமாறும், அதோடிணைந்த கம வீதியையும் சீரமைக்குமாறும் விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக ஆவரஞ்சாட்டி பகுதியில் அமைந்துள்ள இருட்டுமடுவோடு இணைந்த வீதியை தட்டாவயல், தேவர்கட்டு, வலையன் கமம், மலைப்புலவு, அரிவணங்கன், ஆவரஞ்சாட்டி ஆகிய பகுதிகளில் 500 ஏக்கர் வரையிலான நிலத்தை நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
வீதியை புணரமைத்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை
இந்நிலையில், இருட்டுமடுவின் குறுக்காக பாலம் இன்மையாலும், அதனோடு இணைந்த வீதி சீரின்றிக் காணப்படுவதாலும் தாம் விவசாயத்திற்கான உள்ளீடுகளை வயல்நிலங்களுக்கு எடுத்துவருவதிலும், அறுவடைசெய்யப்பட்ட நெல்லினை எடுத்துச் செல்வதிலும் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக இதன்போது விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அத்தோடு, குறித்த பாலத்தை நிர்மாணித்து, அதோடிணைந்த வீதியைச்சீரமைப்புச் செய்தால் உடுப்புக்குளம் கிராம மக்கள் எதிர்நோக்கும் நீண்டதூர போக்குவரத்து நெருக்கடிக்கும் தீர்வாக அமையும் என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, குறித்த இருட்டுமடுப்பாலத்தையும், அதனோடிணைந்த 1 கிலோமீட்டர் தூரமான வீதியையும் சீரமைப்புச் செய்துதருமாறு விவசாயிகளால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையைச் செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர், கோரிக்கையை எழுத்துமூலமாக கையளிக்குமாறு விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டதுடன், விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

