முல்லைத்தீவில் காணி அபகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
முல்லைத்தீவு - கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயம் செய்கின்ற 229 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மதியம் உத்தரவிட்டுள்ளார்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கைக்கு அமைவாகவே ஜனாதிபதி வுத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காணி சுவீகரிப்பு
முல்லைத்தீவு - கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயம் செய்கின்ற 229 ஏக்கர் காணியை தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் தொல்பொருள் திணைக்களத்திற்கு சுவீகரிக்கும் முயற்சியில் அக்காணிகளை அளவீடு செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கு எழுத்துப்பூர்வமான பணிப்புரையை விடுத்துள்ளார்.
ரணில் உத்தரவு
இந்நிலையில், இக்கடிதம் தொடர்பில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேரடியாக சந்தித்து இந்நடவடிக்கையை உடனடியாக இரத்துசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கமைவாக காணி அளவீட்டு பணிகளை உடனடியாக இரத்துசெய்யுமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து எழுத்துப்பூர்வமான கடிதம் முல்லைத்தீவு மாவட்ட தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.