முல்லைத்தீவு உடுப்புக்குளத்தில் காணாமல் போன வீதி: காரணங்களை ஆராயும் ஆர்வலர்கள்
முல்லைத்தீவு உடுப்புக்குளத்தில் வீதியின் ஒரு பகுதி காணாமல் போனதால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். அந்த வீதியின் 300 மீற்றரிலும் கூடிய பகுதியே காணமால் போயுள்ளது.
வீதி வெள்ளத்தால் முற்றாக சேதமடைந்து இருந்த இடம் உருமாறிப் போயிருப்பதனை அவதானிக்கலாம்.
வீதியில் ஏற்பட்ட சேதம்
ஒரு கிலோமீற்றர் தூரமுடைய இந்த வீதி உடுப்புக்குளம் பாடசாலையிலிருந்து அளம்பில் வடக்கு கிராமத்திற்கு செல்வதற்கான இணைப்பு வீதியாக அமைந்துள்ளது. கிரவல் போடப்பட்டு செப்பனிட்டிருந்த இந்த வீதி நீண்ட காலமாக மீள் செப்பனிடப்படாது இருந்ததாகவும் இந்த முறை பொழிந்த கடும் மழையினால் வீதி அரிக்கப்பட்டு சேதமடைந்ததுள்ளதனையும் அவதானிக்கலாம்.
தாழ்நில ஊற்று அதிகரித்ததால் வீதியின் நிலம் சதுப்பாகியுள்ளதனையும் குறிப்பிடலாம். மேட்டு நிலங்களில் இருந்து சேர்ந்து ஓடி வரும் நீர் வீதியின் வழியே பாய்ந்து ஊரின் மத்தியில் உள்ள குளத்திற்கு (உடுப்புக்குளத்திற்கு) செல்கின்றது.
வீதியில் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த வாய்க்கால் சரிவர பேணப்படாமையினால் வீதிக்கு பரவிய வெள்ளநீர் வீதியின் வழியே 300 மீற்றருக்கும் அதிகமான வீதியின் பகுதி வழியே பாய்ந்து அதனை சேதமாக்கியுள்ளதாக அவ்வூர் சமூகசேவையாளர் ஒருவர் விளக்கியிருந்தார்.
வீதிகளின் ஓரங்களில் வளரும் சிறு பற்றைகளை அகற்றி வாய்க்காலில் சேரும் நீரோட்டத்திற்கு தடையேற்படுத்தும் பொருட்களை அகற்றி நீரோட்டத்தினை இலகுவாக்கும் போது வெள்ள நீர் வீதியின் மீது மேவி பாய்ந்திருக்காது என சமூக சேவையின் நுணுக்கமான பகுதிகளில் செயலாற்றி வரும் ஆர்வலரான அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
பாதையின் சேதம் தந்த விளைவுகள்
இந்த வீதியின் சேதத்தினால் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆறுபதுக்கும் மேலானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிய பலசரக்குக் கடையொன்றும் அரிசியாலையொன்றும் அதனைப் பயன்படுத்துவோரின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் வியாபரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுச் சொல்வதை சுட்டிக்காட்டலாம்.
அதிகாலையில் ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்காக பயணிக்கும் இந்த ஊரின் பெண்கள் பலரும் வீதியின் சேதத்தினால் பயணிப்பதில் அதிக சிரமங்களை எதிர்கொள்வதாகவும் நடந்து செல்வது கூட கடினமானதாக இருப்பதாகவும் எடுத்துரைப்பதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் மீன் வியாபாரம் செய்து கொள்பவர்களும் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் அவர்களுடனான உரையாடல்களின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.
மக்கள் நலன் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு
அதிக மழைக்காலங்களை கருத்திலெடுத்து கிராமிய வீதியமைப்புக்களை திட்டமிடுவதோடு கிராமிய அமைப்புக்கள் ஊடாக அதனை பராமரிப்பதற்குமான முன்னெடுப்புக்களை மாவட்டச்செயலகங்கள் மேற்கொள்ளவேண்டும் என மக்கள் நலன் ஆர்வலர்கள் தங்களின் எதிர்பார்ப்புக்களை பகிர்ந்து கொண்டனர்.
சிறிய செப்பனிடல்களை கருத்திலெடுத்து சரி செய்து கொள்ளாமையால் நல்ல நிலையில் உள்ள வீதிகளில் மோசமான சேதங்களை மழைக்காலங்கள் ஏற்படுத்தி விடுவதையும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
உடுப்புக்குளத்தினை முறிப்புடன் இணைக்கும் வீதியில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் ஒன்று முற்றாக சேதமுற்றிருப்பதும் பொறுப்பான தரமான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தாததே காரணமாக அவர்களால் இதன் போது சுட்டிக் காட்டப்பட்டமையும் நோக்கத்தக்கது. மழைக்காலம் கடந்த போதும் அதன் சேதங்களை சரிசெய்து கொள்வதற்கு காலமெடுக்கும் என்பது கவலைக்குரிய விடயமாகும்.