குருந்தூர்மலை விவகாரத்தில் சர்வதேசம் தலையிடவேண்டும்: சம்பந்தன் கோரிக்கை
"இலங்கையில் தமிழ் மக்களுடைய நிலைமை தற்போது எப்படி இருக்கின்றது என்பதை சர்வதேசத்துக்கு குருந்தூர்மலை சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. சர்வதேசம் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்" என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.
குருந்தூர்மலைச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, "குருந்தூர்மலைக்கு நீதிமன்றத்தின் அனுமதியுடன் பொங்கலுக்குச் சென்ற தமிழ் மக்கள் மீது பிக்குகள் தலைமையிலான சிங்களவர்களும், பொலிஸ் படைகளும் அட்டூழியம் புரிந்துள்ளனர்.
இந்தக் குழுவினர் தமிழ் மக்களைப் பொங்கல் செய்யவிடாது திருப்பியனுப்பியுள்ளனர்.
கௌரவமாக வாழ்வதற்கு இடமில்லை
இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயம். நீதிமன்றத்தின் அனுமதி இருந்தாலோ - இல்லாவிட்டாலோ எங்களுடைய சொந்தச் சமயத்தைப் பின்பற்றுவதற்கு - சமயத்தலங்களை வழிபடுவதற்குச் சுதந்திரம் உண்டு.
அந்தச் சுதந்திரத்தைப் பொலிஸ் படைகளும், பிக்குகளும் தடுக்கலாம் என்ற நிலை இருந்தால் இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரமாக - கௌரவமாக வாழ்வதற்கு இடமில்லை என்பதை இது வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றது.
தமிழ் மக்கள் மீதான இந்த அட்டூழியத்தை - அராஜகத்தை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும், அரசும், அமைச்சரவையும், பொலிஸ்மா அதிபரும் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |