குருந்தூர்மலை விவகாரம்: பொலிஸாரின் நடவடிக்கையை நியாயப்படுத்தும் அமைச்சர்!
தமிழ் மக்களுக்கும் சிங்கள – பௌத்தர்களுக்கும் இடையில் குருந்தூர்மலையில் ஏற்படவிருந்த முறுகலையே பொலிஸார் தடுத்தனர் எனவே பொலிஸார் மீது வீணாகக் குற்றம் சுமத்த வேண்டாம்” என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் மக்களில் ஒரு தரப்பினரே பொலிஸாருடன் வலிந்து மோதினர் எனறும் குறிப்பிட்டுளளார்.
குருந்தூர்மலையில் கடந்த வெள்ளிக்கிழமை வழிபடச்சென்ற தமிழ் மக்கள், பிக்குகளாலும் சிங்கள மக்களாலும் – பொலிஸாராலும் இடையூறு விளைவிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டமை தொடர்பில் சம்பவ இடத்தில் நேரடியாக இருந்த செய்தியாளர்கள் அறிக்கையிட்டுள்ளமை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
வழிபாட்டுக் கடமைகள்
அவர் மேலும் கூறுகையில், “சம்பவம் தொடர்பில் பொலிஸார் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாது. குருந்தூர்மலையில் இரு தரப்பினருக்கும் இடையில் குழப்பம் ஏற்படக் கூடிய நிலைமை இருந்தது.
அதை அமைதி வழிப்படுத்தவே பொங்கல் விழாவைச் செய்ய வேண்டாம் என்று பொலிஸார் தடுத்ததுடன் அங்கு வழிபட்டுச் செல்லுமாறு பொலிஸாரும், தொல்பொருள் திணைக்களத்தினரும் கூறினர்.
அதற்கு இணங்க தமிழ் மக்கள் செயற்பட்டனர். அங்கு வழிபடவந்த பௌத்தர்களும் வழிபாட்டுக் கடமைகளை முடித்துவிட்டு அமைதியாகச் சென்றனர்.
விரிவான அறிக்கை
தமிழ் மக்களுடன் சென்ற ஒரு குழுவினர் வலிந்து பொலிஸாருடன் முட்டி மோதினர். காணொளியைப் பார்க்கத் தெளிவாக இது தெரிகின்றது.
சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது பொலிஸாரின் கடமை. அதை வன்முறை வழியில் தடுப்பதற்குத் தமிழ் மக்களுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை.
எனினும், குருந்தூர்மலைச் சம்பவம் தொடர்பில் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸ்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |