முல்லைத்தீவு பூதன் வயல் சந்தியில் நடந்த மாற்றம் : கொண்டாடும் மக்கள்
கடந்த சனிக்கிழமை திறப்புவிழா கண்டது பூதன்வயல் நிழற்குடை.
தண்ணீரூற்று குமுழமுனை பிரதான வீதியில் மதவாளசிங்கன் குளத்திற்கான பிரதான பாதையும் இணையும் சந்தி தான் பூதன் வயல் சந்தி. மரத்தினைச் சுற்றி சீமெந்து வட்டச்சுற்றும் அதனுள் மணலும் நிரப்பி அழகுபடுத்தி இருப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனருகே பேருந்து தரிப்பிடத்திற்கான நிழல் குடை அமைக்கப்பட்டுள்ளது. வழமைக்கு மாறான சிந்தனையோடு சந்தியின் அமைப்பை அழகுற மாற்றி செம்மைப்படுத்தியுள்ளனர்.
பேருந்து தரிப்பிட நிழல்குடை மதவாளசிங்கன் பாதை மற்றும் குமுழமுனை பாதைக்கானது. நிழல் குடை ஒரு தளத்தில் இரு பக்கங்களிலும் இருக்கைகளை கொண்டு இரு நிழல்குடையமைப்பை கொண்டு கட்டப்பட்டது.
கனடா வாழ் தமிழர் தான் இந்த மாற்றங்களை சிந்தித்து நிதியொதுக்கி செய்து முடித்தவர்.சமய முறைகளுக்கமைய கிரியைகளை செய்து சமய சம்பிரதாயங்களின்படி நிழல்குடை திறப்பு விழாவினை செய்து முடித்துள்ளார்.
கனடாவாழ் தமிழர் என்ன சொல்கிறார்?
தான் பிறந்து வளர்ந்து ஓடி விளையாடிய மண் பூதன்வயல். தன் பெற்றோரின் நினைவாக இந்த நிழல் குடையினை வடிவமைத்ததாக கூறினார். முள்ளியவளை உப பிரதேச சபையினர் கட்டிட அனுமதியை சிரமங்களை தவிர்த்து விரைவுபடுத்திய செயற்பாடுகளை முன்னெடுத்து தந்து உதவியதாகவும் பொறியியலாளர் மூலம் திட்டமிடலை செய்து கட்டிடங்கள் அமைத்ததாகவும் கூறினார்.
மேலும் எட்டு மாதங்களுக்குள் திறப்பு விழாவினை முடிக்கக்கூடியதாக இருந்ததாகவும் கூறினார்.
வீதியினை பயன்படுத்தும் மக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் போது களையாறி கதைபேசியபடி பயணங்களை செய்ய இது உதவும்படி திட்டமிட்டுள்ளதாகவும் அருகிலுள்ள மரத்தினை சுற்றி அமைத்த இருக்கையமைப்பு மர நிழல் எல்லாம் மாலை வேளை பொழுதை இதமாக கழித்திட உதவிடும் எனவும் மகிழ்ச்சி வெளியிட்டார்.
பயணிகளின் கருத்துக்கள்
பூதன் வயல் சந்தியில் இந்த மாற்றங்களை பார்த்து வியந்து போனதாக தன் பேரானந்தத்தை வெளிப்படுத்திய முதியவர் ஒருவர் குறிப்பிட்டார். நித்தமும் மாலை இந்த மரத்தடியில் இருந்து தன் வயதான நண்பர்களோடு உரையாடுவதாகவும் இது மனதுக்கு மகிழ்வுக்குரியதாகவும் இருப்பதாக மேலும் குறிப்பிட்டார்.
பூதன் வயல் இளைய சமூகத்தினரும் பயணிகளும் வரவேற்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது.
ஐந்து பாதைகளின் சந்திப்புகள்
இந்த சந்தியில் ஐந்து பாதைகள் வந்து இணைந்த போதும் வட்டச்சந்தியை ஆக்கவில்லை. மதவாளசிங்கன் குளத்துக்கான பாதை, குமுழமுனைக்கானபாதை, தண்ணீரூற்றுக்கான பாதை, குமாரபுரத்துக்கான பாதை, மாமூலைக்கான பாதை என ஐந்து இடங்களுக்கான திருப்பத்தை இந்த சந்தி ஏற்படுத்தியவாறு அமைகின்றது.
வித்தியாசமான சூழலமைவு இந்த கட்டுமானங்களுக்கு மேலும் மெருகூட்டி நிற்பதை உணர
முடிகிறது என இந்தக் கட்டுமானங்களை மேற்பார்வை செய்திருந்தவர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |