முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் அசமந்தம்: மாற்றம் கோரும் பொதுமக்கள்
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் உள்ள பனையோலைக் கொட்டில் கவனிக்கப்படாது இருப்பது ஆச்சரியமளிக்கின்றது.
மாவட்டச் செயலகத்திற்குள் செல்லும் பிரதான வாசலினை எதிர்கொள்ளும் வண்ணம் உள்ள இந்த கொட்டில் வேயப்படாது இத்துப்போன பனையோலைக் கூரையோடு இருப்பது பார்வைக்கு முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடாக இருக்கின்றது என இன்றைய (19.03.2024) தினம் மாவட்டச் செயலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் சிலரிடம் இது தொடர்பில் கேட்ட போது கருத்திட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் செயலகங்களின் தலைமையகமாக அமைந்துள்ள மாவட்டச் செயலகம் (GA office) ஒன்றில் கவனிப்பாரற்று இருக்கும் இடமாக இது அமைந்திருப்பது தொடர்பில் கருத்துக்களை கூறுவதில் பலரும் பின்வாங்கிக் கொண்டதும் குறிப்பிட்டாக வேண்டிய விடயமாகும்.
வெயில் காலம்
கருத்துரைக்க மறுத்த ஒரு வயோதிபர் தான் கருத்துரைப்பதானது மேலே பார்த்தவாறு துப்புவதாக இருக்கும் என குறிப்பிட்டதும் இங்கே நோக்கத்தக்கது.
முன்மாதிரியான செயற்பாடாக இது அமையவில்லை. கொட்டில் வேயப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வெயில் காலத்தில் தேவைகளுக்காக வந்து செல்வோர் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்துச் செல்ல நல்ல களமாக இருந்திருக்கும்.
குடிப்பதற்கு மண் பானையில் தண்ணீரும் வைத்திருக்கலாம் என ஒருவர் தன் கருத்தாக பகிர்ந்து கொண்டிருந்தார்.
ஒல்லாந்துக் கோட்டை
மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைச் செயலகமாக அரசாங்க அதிபர் அலுவலகம் அமைவது இலங்கையின் நிர்வாகவியல் ஒழுங்கமைப்புக்களில் ஒன்றாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் அலுவலகம் முல்லைத்தீவு சுற்றுச் சந்தியின் ஒரு பக்கத்தில் அமைந்துள்ளது.
அதிகளவான மக்கள் வந்து செல்லும் இடமாகவும் மாவட்டச் செயலகம் அமைந்துள்ளது.
முல்லைத்தீவில் உள்ள ஒல்லாந்தர் கோட்டையின் எச்சங்களை கொண்டுள்ள இந்த இடம் சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்து ஈர்த்து அவர்களையும் அரவணைத்துக் கொள்ளும் ஒரு இடமாக அமைந்துள்ளதும் நோக்கத்தக்கது.
உக்கலடைந்த பனையோலைக் கொட்டிலானது ஒல்லாந்துக் கோட்டையின் இடிந்த சுவர் ஒன்றிற்கு அருகில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒல்லாந்துக் கோட்டையை பார்க்க வரும் மக்களுக்கு பார்வைக்கு உகந்த எச்சத்துண்டாக மாவட்டச் செயலகத்தின் உள் நுழைவு வாசலின் அருகில் இருக்கும் ஒல்லாந்துக் கோட்டையின் சுவரே பேணப்படுவதும் நோக்கத்தக்கது.
மாவட்டச் செயலகம் ஒல்லாந்துக் கோட்டை இருந்த இடத்தில் தான் கட்டப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலகத்தின் ஏனைய இடங்களிலும் ஒல்லாந்துக் கோட்டையின் எச்சங்களை அவதானிக்கலாம் என முல்லைத்தீவில் உள்ள பிரபலமான கல்வி நிலையமொன்றின் நிறுவுனர் குறிப்பிட்டிருந்தார்.
பண்டாரவன்னியனால் வெற்றி கொள்ளப்பட்டு இரண்டு பிரங்கிகளைக் கைப்பற்றியிருந்த இடமாகவும் முல்லைத்தீவு ஒல்லாந்துக் கோட்டை அமைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தமிழர்களும் பெருமையோடு வந்து பார்த்துச் செல்லக்கூடிய இடங்களில் மாவட்டச் செயலகத்தில் உள்ள ஒல்லாந்துக் கோட்டையின் எச்சங்களும் அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாவட்டச் செயலகத்திற்கான பிரதான வாசல்
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு செல்லும் மற்றும் வெளியேறும் வாசல்கள் இரண்டும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
உள் நுழைவு வாசல் சுற்றுச் சந்திக்கு அருகிலும் வெளியேறும் வாசல் மாவட்டச் செயலகத்திற்குள் உள்ள அம்மாச்சி உணவகத்திற்கு அருகாகவும் அமைந்துள்ளது.
இந்த இரு பிரதான வாசல்களும் சுற்றுச் சந்தியில் இருந்து செல்வபுரத்திற்குச் செல்லும் பாதையில் முல்லைத்தீவு பிரதான மைதானத்தினைப் பார்க்க அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மாவட்டச் செயலகத்தின் உள்நுழையும் பாதையின் வழியாக வேயாது இருக்கும் கொட்டிலின் அருகாக செல்லும் பாதையின் வழியே சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் அலுவலகம், தேர்தல்கள் அலுவலகம்,மாவட்ட கலாச்சார அலுவலகம், மற்றும் வாகனங்களின் தரிப்பிடம் என பல அலுவலகங்கள் அமைந்துள்ள.
அவற்றுக்கெல்லாம் செல்லும் மக்கள் இந்த கொட்டிலைத் தரிசித்துத் தான் செல்ல வேண்டும் என்பது இன்றைய சூழலில் கவலையளிக்கும் விடயமாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
அழகிய பனையோலைக் கொட்டில் அது
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு மேலும் அழகு சேர்ப்பதாக இந்த பனையோலையால் வேயப்பட்ட வட்டக் கொட்டில் அமைந்திருந்தது.
முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட வடக்கில் அதிகளவில் வளரும் தாவரமாக பனைமரம் இருப்பதும் அதன் ஓலையால் கொட்டில்களை வேய்ந்து கொள்ளும் தமிழர்களின் பாரம்பரிய இயற்கையான வாழ்க்கை முறையையும் வருவோருக்கு எடுத்தியம்பும் விதமாகவும் இருந்தது என அதன் ஆரம்ப தோற்றம் பற்றி கவிஞர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
வடட்டக் கொட்டில் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. பிவீசி குழாயில் சீமெந்து மற்றும் இரும்புக் கம்பிகளை கொண்டு தூண்களை நிறுவி அதன் மீது மரத்தாலான தடிகளைக் கொண்டு கொட்டிலமைத்து பனை ஓலைகளைக் கொண்டு கூரை வேயப்பட்டிருந்தது.
சீமெந்து சுற்றுச் சுவரை அமைத்து நிலத்திற்கு சீமெந்து இட்டு தரை சீராக்கப்பட்டிருந்தது.
விருந்தினர்கள் வந்து அமர்ந்து கதைக்கும் இடமாக இதனை பயன்படுத்தலாம். அவ்வாறும் மற்றும் மாவட்டச் செயலகத்திற்கு வருவோர் ஓய்வெடுத்துக் செல்லம் இடமாகவும் இது இருந்திருந்தது என முன்னாள் போராளி ஒருவர் குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகள் அலுவலகங்களில் இப்படியான ஒரு வட்டக் கொட்டில் இருந்ததை இது தனக்கு நினைவு படுத்துகின்றது. இதனைப் பார்க்கும் போதெல்லாம் அந்த நினைவு திரும்புவதாக அவர் மேலும் தன் நினைவை மீட்டினார்.
விடுதலைப்புலிகளின் அலுவலகங்களில் அமைந்துள்ள எந்தவொரு கொட்டில்களும் அதுவும் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் உக்கலடைந்த நிலையில் இருக்க விடுவதில்லை. உரிய பயன்படில்லை எனில் அவற்றை அகற்றிவிடவே அதிகம் முயற்சிப்பார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொட்டில்களினுள் இருக்கும் தளபாடங்கள்
வெயில் அதிகம் உள்ள இன்றைய நாட்களில் உக்கலடைந்த பனையோலைக் கொட்டிலினுள் பிளாஸ்டிக் மற்றும் மரத் தளபாடங்கள் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
குறைந்த பட்சம் இவற்றையாவது எடுத்து மற்றொரு பாதுகாப்பான இடங்களில் வைத்திருக்கலாமே என கருதும் மக்களும் உள்ளனர்.
வெயிலில் அவை காணப்படும் போது விரைவாக பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்குள்ளாகிவிடும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டுகின்றனர்.
இலங்கையின் இன்றைய பொருளாதார நிலையை எடுத்தியம்பும் வகையில் இந்த கொட்டில் பேணப்படுகின்றதோ என எண்ணத் தோன்றுவதாக இன்றைய நிலை தொடர்பில் எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் இது தொடர்பில் கவனம் செலுத்தாதிருப்பது ஏன் என்று ஆச்சரியப்படும் மக்கள் பலரையும் சந்திக்க முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.
பலரும் வந்து செல்லும் வழித்தடத்தில் பொருத்தமற்ற செயற்பாடுகளைத் தவிர்த்தலே அறிவுடைமையாகும்.இதுவரையும் பயன்பாட்டில் இருந்து வந்த ஒரு இடத்தின் தேவை இப்போதும் இருக்கின்ற போதும் அது ஏன் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது என்பதற்கு பொருத்தமான பதில்களை எப்படித் தேட முடியும்? என கேள்விகளை முன்வைத்து கடந்து சென்ற மக்களும் உள்ளனர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |