தேசியமட்ட போட்டிகளில் சாதனை படைத்த தமிழர் பகுதி பாடசாலைகள்(Photos)
பாடசாலை தேசிய மல்யுத்தப் போட்டியில் முல்.வித்தியானந்தா கல்லூரி ,முல்.கலைமகள் வித்தியாலயம் முறையே தங்கம் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் முதல் முதலாக வரலாற்றில் மல்யுத்த தேசிய போட்டியில் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தேசிய மட்ட மல்யுத்தப் போட்டி
2022 கல்வியமைச்சின் பாடசாலை மாணவர்களுக்கு இடையே நடத்தப்படும் தேசிய மட்ட மல்யுத்தப் போட்டி 22,23,24 ஆகிய 3 நாட்கள் நேற்று மாலைவரை கம்பகாவில் நடைபெற்றது.
இப் போட்டியில் வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் 12 பேர் பங்குகொண்டதுடன் 5 பேர் காலிறுதிவரை முன்னேறியதுடன் கலைமகள் வித்தியாலய 7 மாணவர்கள் பங்குகொண்டனர் ஒருவர் இறுதிவரை முன்னேறினார்.
வட மாகாணம் சார்பாக, இவ் வட மாகாணத்தில் போட்டிகள் நடைபெறாத நிலையில் முல்லைத்தீவு பாடசாலைகள் மாத்திரம் இவ் மல்யுத்த போட்டியில் நேரடியாக தேசிய போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
மாணவர்கள் பெற்றுக்கொண்ட பதக்கங்கள்
இப் போட்டியில் வித்தியானந்தா கல்லூரி மாணவன் ஆர்.றஜிதன் தங்க பதக்கத்தையும்(1ம் இடம்) கலைமகள் வித்தியாலய மாணவன் ஜெயானந்தராசா வினேசன் 51-55 கிலோ கிராம் பிரிவு வெள்ளிப் பதக்கம்(2ம் இடம்) பெற்றிருந்தார்.
இந்த வீரர்களுக்கான பயிற்சியினை மாவட்ட விளையாட்டுப் பிரிவின் ஆதரவு ஒழுங்குபடுத்தல்களுடன் மாவட்ட மல்யுத்த பயிற்றுனர் பி.தர்சன் அர்பணிப்புடன் வழங்கி வருகிறார்.
இந்த சாதனைக்கு பாடசாலை நிர்வாகம், அதிபர்கள் , உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பயிற்றுனர், பழைய மாணவர்கள், பெற்றோர்களின் அதீத அக்கறை இவ் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாடசாலைகளின் முதற் தடவையான மாவட்ட வரலாற்றுச் சாதனைக்கு வழிவகுத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா
தேசிய குத்துச்சண்டை போட்டியில் வவுனியா திருஞானசம்பந்தர் வித்தியாலயத்திற்கு இரண்டு தங்கம் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வவுனியா சிறீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயம் இரண்டு தங்க பதக்கங்களை வென்றுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான கல்வியமைச்சினால் நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டி இம்மாதம் 21,22,23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாவலப்பிட்டிய ஜெயதிலக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இப்போட்டியில் வவுனியா சிறீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயம் சார்பாக பங்குபற்றிய மாணவிகளான எல்.கஜேந்தினி 57 கிலோகிராம் எடைப் பிரிவில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளதுடன், 60 கிலோகிராம் எடைப் பிரிவில் யூ.கீர்த்தனாவும் தங்கப்பதக்கத்தை பெற்று பாடசாலைக்கும், வலயத்திற்கும், மாகாணத்திற்கும், கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
மாணவர்களின் சாதனையையும் அவர்களின் வெற்றிக்கு காரணமாயிருந்த உடற்கல்வி ஆசிரியர் கே.நிரஞ்சன், பயிற்றுவிப்பாளர் எஸ்.நிக்சன் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
செய்தி-திலீபன்
பளுதூக்கல் போட்டியில் தங்கம் வென்ற மாணவனுக்கு பாராட்டு விழா
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் முதலாம் இடம் பெற்று தங்கம் வென்ற மட்.புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவன் செல்வன் யோகநாதன் சதீஸ்காந்தனுக்கு பாராட்டி கௌரவிக்கின்ற நிகழ்வு இன்று(25) மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் நடைபெற்றுள்ளது.
வரலாற்றில் முதல் தடவையாக பளுதூக்கல் போட்டியில் கிழக்கு மாகாணம் தங்கம் வென்றுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
இந்த வெற்றி கிழக்கு மாகாணத்திற்கு குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.
பாடசாலை அதிபர் அ.கு.லேந்திரராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் பிரதம அதிதியாகவும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் புதுக்குடியிருப்பு ஆலயபரிபாலன சபையின் நிர்வாக உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் கிராமப் பெரியார்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
பணபரிசு
இதன்போது விக்கினேஸ்வரர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய வரவேற்பு நிகழ்வு நடை பவனியாக கண்ணகி மகா வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபம் வரை சென்று அங்கு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு ஆலய பரிபாலன சபையின் பணபரிசுடனான அமோக வரவேற்பும் ஆசியும் வெற்றியீட்டிய மாணவனுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குறித்த மாணவனின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் குறிப்பாக பாடசாலையின் வளர்ச்சிக்கு அயராது ஊக்கமளித்துவரும் வலயக்கல்விப் பணிப்பாளர் சுஜாதா அம்மணிக்கு விசேடமாக அதிபரினால் நன்றி கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி-ருசாத்










ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
