முல்லைத்தீவில் மதகுகளற்ற வீதியால் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் மக்கள்
முல்லைத்தீவில் உள்ள வீதியொன்றின் மதகுகளற்ற நிலையினால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு குமுழமுனையில் உள்ள கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வீதியிலேயே இந்த அசௌகரியங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர்.
ஒரு கிலோமீற்றர் நீளம் கொண்டதாக இருக்கக்கூடிய இந்த வீதி குமுழமுனைச் சந்தியில் இருந்து அளம்பில் தண்ணிமுறிப்பு பிரதான வீதியுடன் நாகதம்பிரான் ஆலயச் சந்தியில் இணைகின்றது.
பொருத்தமான இடங்களில் பாலங்களை அமைக்காது அல்லது மதகுகளை வைக்காது இருப்பதாலேயே இந்த இடர்பாடு தோன்றியுள்ளது.
வீதிக்கு மேலாக பாயும் நீர்
இந்த வீதியின் மூன்றிற்கும் குறையாத இடங்களில் வீதிக்கு மேலாக வீதியை குறுக்கறுத்து மற்றும் வீதியை மூடி மழைநீர் பாய்ந்து செல்வதை அவதானிக்கலாம்.
சாதாரண மழைக் காலங்களிலும் கூட இந்த அசௌகரியங்களை எதிர் கொள்வதென்பது பொருத்தமான பாதை இல்லை என்பதாகவே கருத வேண்டியுள்ளது என கருத்திடும் பாடசாலை மாணவர்கள் சிலர் மதகுகளின் அமைவிடம் இடமாறியிருப்பதாக குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
மதகுகளை வைக்க வேண்டிய பொருத்தமான இடங்களை தெரிவு செய்து கொள்ளாத மற்றும் தேவையான அளவுகளில், எண்ணிக்கையில் அவை இல்லாது காணப்படகிறது.
அத்தோடு, இந்த வீதியுடன் குறுக்கு வீதி இணையும் இடமொன்றில் பாதையை மேவி நீர் வழிந்தோடுவதை காணலாம்.அந்த நீர் வடிந்தோட பொருத்தமான மதகு ஒன்று அவ்விடத்தில் வைக்கப்படுமானால் நீர் மதகினூடாக வீதியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாடசாலை மாணவர்கள், விவசாயிகள் என பலரும் அதிகமாக பயன்படுத்தி வரும் இந்த வீதியில், வீதிக்கு குறுக்காக மற்றும் வீதியை மேவி நீர் வடிந்தோடிச் செல்வது, பயணத்தின் போது அசௌகரியமாக இருப்பதை அவர்கள் எல்லோரும் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருப்பதையும் மக்கள் பலருடன் உரையாடிய தன் மூலம் அறிய முடிந்தது.
ஆனாலும், இதுவரையில் எத்தகைய மாற்றங்களையும் காணமுடியவில்லை என தங்கள் ஆதங்கத்தினையும் அவர்களில் பலர் வெளிப்படுத்தியிருந்தனர்.
கிராமிய அபிவிருத்தி
இந்த வீதியின் ஆரோக்கியமான அமைப்புத் தொடர்பில் கிராமிய அமைப்புக்கள் கவனம் செலுத்தியுள்ள போதும் ஒவ்வொரு வருடமும் மழையினால் ஏற்படும் இடர்பாடுகளை அவை கண்டு கொள்ளாதது ஆச்சரியமளிக்கின்றது.
கொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவில், குன்றில் குமரன் கோவில் மற்றும் நாகதம்பிரான் ஆலயம் ஆகிய கிராமத்தின் மூன்று முதன்மையான ஆலயங்களுக்கும் திருவிழாக்கால பிரதான வீதியாக இது இருந்து வருவதாக அவ்வூர் மக்கள் பலரும் குறிப்பிட்டிருந்தனர்.
வீதியின் ஓரங்களை அழகுபடுத்தி குமுழமுனை கற்பகப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து இந்த வீதியின் ஊடாகவே காவடி, பாற்செம்புகள் எடுத்துவரப்படும் என மேலும் குறிப்பிட்டனர்.
இந்த வீதியின் கொட்டுக் கிணற்று பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாக குமுழமுனை பால்ப்பண்ணை நிலையமும் அமைந்துள்ளது.இதற்கான பிரதான பாதையாகவும் இந்த பாதையே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, இந்த வீதியிலேயே தனியார் பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமொன்றும் இருக்கின்றது.
இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டால், இந்த வீதியில் இப்போதுள்ள இடர்பாடுகளுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தல், அதிகளவிலான பயன்பாட்டாளர்களுக்கு அது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
பல சமூக ஆர்வலர்கள் மற்றும் இப்பாதையின் பயன்பாட்டாளர்கள் பலராலும் பல சந்தர்ப்பங்களில் இந்த இடர்பாடுகளுக்கான தீர்வுகளை பெற்றுத்தர வலியுறுத்திய போதும் இதுவரையில் மாற்றங்கள் இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |