மிருதங்க இசை வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார்
ஈழத்து இசைப்பாரம்பரியத்தின் முன்னோடிக் கலைஞர் மிருதங்க வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார்.
அவர் கடந்த (16) ஆம் திகதி உடல்நலக் குறைவால் ஜேர்மனியில் காலமானார்.
1951 ஓகஸ்ட் 13 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் உடுவிலில் இசைப்புலவர் சண்முகரட்ணம் மற்றும் ஜெயலக்ஷ்மி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த பிரணவநாதன், தனது தந்தையார் வழியிலேயே இசைப்புலைமை பெற்று, மிருதங்கக் கலையில் தேர்ச்சி பெற்று விளங்கினார்.
மிருதங்க நாதம்
இலங்கையின் புகழ் பெற்ற கர்நாடக இசை வித்துவான் கலாசூடாமணி சண்முகராகவனின் இளைய சகோதரர் இவராவர்.
தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனி நாட்டில் வாழ்ந்து வந்த இவர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற பல நூறு நிகழ்ச்சிகளில் மிருதங்க இசை மீட்டி மக்களை மகிழ்வித்து வந்தவர்.
இவரது மிருதங்க நாதம் என்பது மிகவும் உன்னதமானது. பாடகர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்ற விதத்தில் மிருதங்க நாதத்தை வழங்கிப் புகழ்பெற்றவர்.
ஆடற்கலை அரங்கேற்றங்களிலும் இவரது மிருதங்க இசை மீட்டல் ஆடல் புரிகின்றவர்களுக்கு மிகச்சிறப்பான ஒத்திசைவாக இருக்கும். பல மாணாக்கர்களை ஐரோப்பிய தேசத்தில் உருவாக்கிய பெருமைக்குரியவர்.
அற்புத மிருதங்க வித்துவான்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் முதுநிலைத் தேர்வு நடுவராகவும் பிரபல்யமான மிருதங்க ஆசிரியராகவும், அணிசேர் கலைஞருமாக விளங்கிய பிரணவநாதன் சங்கீதரத்தினம், லயஞானகுமாரன் ஆகிய பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.
இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான சஞ்சய் சுப்ரமணியம், உன்னிகிருஷ்ணன், சுதா ரகுநாதன் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்களுக்கு தனது மிருதங்க லயத்தால் அழகு சேர்த்தவர் ஐரோப்பிய நாடுகளில் கர்நாடக இசையைப் பரப்பும் பணியில் முன்னணி பங்கு வகித்தவர்.
மிகவும் நுண்ணியதுடன் அதீத ஈடுபாட்டுடனும், இசைக்காக வாழ்ந்த அற்புத மிருதங்க வித்துவான். அவரது மறைவு ஈழத்து இசைப்பாரம்பரியத்துக்கு பேரிழப்பாகும்.
அவரது நினைவுகள் அவர் மீட்டிப் பதிவாகியுள்ள மிருதங்க இசையூடாக இவ்வுலகம் உள்ளவரை ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது நினைவுகளும் நிலைபெற்றிருக்கும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




