கொழும்பு துறைமுக நகரத்திற்காக கொண்டுவரப்பட்ட கற்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர்களின் பணிப்புரை
நிந்தவூர் கடல் அரிப்பை தடுப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலாளர்களுடன், நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது குறித்த விடயம் சம்பந்தமாக முஷாரப் விளக்கியதுடன் இரண்டு முன்மொழிவுகளையும் முன்வைத்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத்திற்காக கொண்டுவரப்பட்ட கற்கள்
கொழும்பு துறைமுகத்தை அண்டிய துறைமுக நகரத்தை உருவாக்கும் வேளையில் பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதை தடுக்க Tetrapods கற்கள் கடந்த காலத்தில் அங்கு கொண்டுவரப்பட்டன.
ஆனால் எதிர்பார்த்த பாதிப்புக்கள் துறைமுக நகர பணியில் ஏற்படாததால் அங்கு கொண்டுவரப்பட்ட கற்களை நிந்தவூர் பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேச கடற் பகுதிகளுக்கு கொண்டு சென்று கடல் அரிப்பை கட்டுப்படுத்த முடியும் என்று முஷாரப் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி குறித்த கடல் அரிப்பை தடுப்பதற்காக தீர்மானிக்கப்பட தொகையினை கொண்டு குறித்த கற்களை கப்பலூடாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு கொண்டுவரும் அதேவேளை இப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினையும் வழங்க முடியும் என்றும் அவர் ஜனாதிபதியின் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணிப்புரை
ஆலோசனைகளை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதியின் செயலாளர்கள், தீவிரமடைந்த கடல் அரிப்பை நிரந்தரமாக தடுப்பதற்கு துறைமுக நகரம் மற்றும் துறைமுகத்தை அண்டியுள்ள உள்ள பகுதிகளில் காணப்படும் Tetrapods கற்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பயன்படுத்த தேவையான சாத்தியப்பாடுகளை நடைமுறைப்படுத்த முயற்சி எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளனர்.
இதேவேளை மிக மோசமாக கடல் அரிப்பை எதிர்கொண்டிருக்கும் நிந்தவூர் கடல் அரிப்பின் தீவிர தன்மையை உடனடியாக கட்டுப்படுத்துமாறு முஷாரப் கடந்த 2021ஆம் ஆண்டு 12ஆம் மாதம் மாதம் ஏழாம் திகதி இடம்பெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு முன்மொழிவை முன்வைத்திருந்தார்.
அதன்பின்னர் குறித்த கூட்டத்தில் கடல் அரிப்பினை தடுப்பதற்காக 56,000,000 ரூபாவை அவசரமாக ஒதுக்குவதற்கு தீர்மானம் எட்டப்பட்டு கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வள முகாமைத்துவத் திணைக்களம், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு 2022 முதலாம் மாதம் 25ஆம் திகதி இதுகுறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அத்துடன் குறித்த கடல் அரிப்பை தடுப்பதற்கான அபிவிருத்தி முன்மொழிவையும் கடிதத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் கடல் அரிப்பு தீவிரமடைந்ததை அடுத்து நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் 2022 எட்டாம் மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப்பின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வந்ததை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









