மோடியின் பயணத்தின்போது பரிமாறிக்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
2025 ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களை, இலங்கை அரசாங்கத்துடன் பரிமாறிக் கொள்வார் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எரிசக்தி இணைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மானிய உதவி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களே பரிமாறப்பட உள்ளது.
இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சம்பூர் சூரிய சக்தி திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவிலும் இந்தியப் பிரதமர் கலந்து கொள்வார் என்று கூறியுள்ளார்.
இருதரப்பு உறவு
மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக 2024 டிசம்பரில் புதுடில்லிக்கு விஜயம் செய்ததாகவும், இப்போது பிரதமர் மோடி இலங்கையின் ஜனாதிபதி திசாநாயக்கவால் விருந்தளிக்கப்படும் முதல் வெளிநாட்டுத் தலைவராக இலங்கைக்கு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் தங்கள் இருதரப்பு உறவுகளில் இணைக்கும் முக்கியத்துவத்தை இந்த பயணங்கள் பிரதிபலிக்கின்றன என்று மிஸ்ரி மேலும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |