டிட்வா புயலினால் கடுமையாக சேதமடைந்த புகையிரத பாதை விரைவில் சீரமைப்பு
மலையகப் பகுதிகளை தாக்கிய டிட்வா புயலினால் கடுமையாக சேதமடைந்த கொட்டகலை முதல் அம்பேவலை வரையிலான புகையிரத பாதையின் சீரமைப்புப் பணிகள் துரிதமாகமுன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர தெரிவித்துள்ளார்.
பாதிப்படைந்த புகையிரத வீதிகளையும் புனர்நிர்மான பணிகளை பார்வையிடுவதற்காக நேற்றையதினம் (1) ஆம் திகதி களவிஜயம் மேற்கொண்டு போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சீரமைப்புப் பணிகள்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டிட்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக மலையக புகையிரத பாதையின் பல பகுதிகளில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டிருந்தன.
குறிப்பாக கொட்டகலை தொடக்கம் அம்பேவலை வரையிலான பகுதியில் ஐந்து இடங்களில் புகையிரத பாதை கடுமையாக சேதமடைந்திருந்தன.

இந்த அனர்த்த நிலை காரணமாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி இயக்கப்பட்டு வந்த புகையிரத சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டதுடன், மலையக மக்களின் அன்றாட போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருந்தன.
இந்நிலையில் சேதமடைந்த ஐந்து பகுதிகளில் மூன்று இடங்களின் சீரமைப்புப் பணிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மஞ்சுள சுரவீர தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள இரண்டு முக்கியமான பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், காலநிலை ஒத்துழைத்தால் எதிர்வரும் ஓக்டோபர் மாதத்திற்கு முன்னர் அவற்றையும் முழுமையாக சீரமைத்து முடிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயல்பு நிலை
தற்போது புகையிரத சேவைகள் பகுதியளவில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பதுளை முதல் அம்பேவலை வரையிலான சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.
எஞ்சியுள்ள இரண்டு சேதமடைந்த பகுதிகளும் புனரமைக்கப்பட்ட பின்னர், பதுளை முதல் நாவலப்பிட்டி வரையிலான புகையிரத சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மலையகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் புகையிரத சேவையின் முழுமையான மீட்பு, ஆயிரக்கணக்கான பயணிகள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சீரமைப்புப் பணிகள் இடம்பெறும் பகுதிகளில் பொறியியல் குழுக்கள், புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. குறி;ப்பிடத்தக்கது.






