கேகாலையில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு
கேகாலை பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் தங்கச் சங்கிலி பறித்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரக்காபொல நீதவான் நீதிமன்றம் நேற்று(15.01.2026) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
வரக்காபொல பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மூன்று சந்தேக நபர்களும் கடந்த (14.01.2026) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்களால் போலி இலக்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள், கிரிஉல்ல மற்றும் தம்பதெனிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் மூவரும் போதைப்பொருள் பாவனைக்குக் அடிமையானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் வரக்காபொல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.