காணாமல்போனவர்களென பதிவு செய்யப்பட்டுள்ள 2,10,000 பேர்
சமகாலத்தில் 'செஞ்சிலுவை மற்றும் செம்பிறை குடும்பத்தொடர்பு வலைப்பின்னலில்' காணாமல்போனவர்கள் என 210000 இற்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சர்வதேச குழுவின் (ஐ.சி.ஆர்.சி) பணிப்பாளர் நாயகம் ரொபர்ட் மார்டினி தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காணாமல்போனவர்கள் தொடர்பான சர்வதேச தினம், 30 ஆகஸ்ட் 2021 ஆட்கள் காணாமல் போன குடும்பங்கள் மறக்கப்படக்கூடாது.
இன்றைய தினம், செஞ்சிலுவை சர்வதேச குழுவானது. ஆயுத நெருக்கடிகள், ஏனைய வன்முறை நிலைமைகள், பேரனர்த்தங்கள், மனிதநேய அவசரநிலைகள் புலம்பெயர்வு போன்றவை காரணமாக உலகெங்கிலும் காணாமல்போன அல்லது குடும்பங்களை விட்டு பிரிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கானவர்களை நினைவு கூறுகின்றது.
இவர்களில் பலர் இனிமேல் திரும்ப மாட்டார்கள். அவர்கள் பற்றி மீண்டும் அறிய முடியாது. இது உலகளாவிய ரீதியிலான பாரியதொரு பேரவலமாக இருக்கிறது. "தமது அன்புக்குரியவர்கள் மறக்கப்படவில்லை என்பதை ஆட்கள் காணாமல்போன குடும்பங்கள் அறிய வேண்டுமென நாம் விரும்புகிறோம்.
தமது அதிகார எல்லைக்குள் குடும்பங்களுக்கு பதில் அளிக்கவும். அதன்மூலம் தகவல் அறிவதற்கு குடும்பங்கள் கொண்டுள்ள உரிமைகளை உறுதி செய்யவும் அரசுகள் சகல நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு நாம் தொடர்ந்து உதவுவோம். சமகாலத்தில் 'செஞ்சிலுவை மற்றும் செம்பிறை குடும்பத்தொடர்பு வலைப்பின்னலில்' காணாமல்போனவர்கள் என 210000 இற்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
எனினும், இந்த எண்ணிக்கை மாத்திரம் பிரச்சினையின் தீவிரத்தை சரியாக பிரதிபலிக்கவில்லை. எண்ணிக்கையின் பின்புலத்தில் ஆட்கள் காணாமல்போன குடும்பங்களின் பெருந்துயரங்கள் இருக்கின்றன.
இந்தக் குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு நடந்தது என்ன, அவர்கள் எங்குள்ளனர் என்பதையெல்லாம் அறியாது பதகளிப்புடனும், நிச்சயமற்றதான உணர்வுடனும் வாழ்ந்து வருகின்றன.
தமது பெற்றோருக்கோ, வாழ்க்கைத் துணைக்கோ, பிள்ளைக்கோ, உடன்பிறப்பிற்கோ என்ன நடந்தது என்பதை அறியாதிருப்பதன் காரணமாக, இந்தக் குடும்பங்கள் நம்பிக்கைக்கும், நம்பிக்கையீனத்திற்கும் இடையிலான நிலையில், துயரத்தை வெளிப்படுத்தவும் முடியாமல் கஷ்டமான வாழ்க்கையை வாழ நேரும் சூழ்நிலையானது. இவர்கள் மீது சகிக்க முடியாத பளுவை சுமத்துகின்றது.
ஆட்கள் காணாமல் போன குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய பதில்களுக்காக காத்திருக்கும் பின்புலத்தில், அன்புக்குரியவர்கள் பிரசன்னமாக இல்லாதிருப்பதால் எழக்கூடிய எண்ணற்ற உளவியல்-சமூக, நிர்வாக, சட்ட, பொருளாதார ரீதியான சவால்களை சமாளிக்க முடியாமல் குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன.
கோவிட்-19 பெருந்தொற்றும், அதன் தொடர்ச்சியான நிர்வாகக் கட்டுப்பாடுகளும், தீவிர பொருளாதார கஷ்டங்களும் தோன்றி, அவர்களது துயரை மென்மேலும் தீவிரமாக்கியுள்ளன.
இந்தப் பெருந்துயரைத் தவிர்க்க முடியும். குடும்பத் தொடர்புகள் சீர்குலைதளை தவிர்த்தல் மற்றும் பிரிவுற்ற குடும்ப அங்கத்தவர்கள் மத்தியில் தொடர்புகளை பேணுதல், இறந்தவர்களின் உடல்கள் முறையாக நிர்வகிக்கப்படுதலை உறுதி செய்தல்,தேசிய சட்டங்களைப் பலப்படுத்தல்.
சர்வதேச சட்டத்தின் கீழுள்ள கடப்பாடுகளுடன் இணைந்து பொருத்தமான பொறிமுறைகளையும், கட்டமைப்புக்களையும் ஸ்தாபித்தல் ஆகியவற்றை இலக்காக கொண்ட ஸ்திரமான நடவடிக்கைகள் மூலம், இந்த உலகளாவிய மனிதாபிமான நெருக்கடியின் பல கூறுகளுக்கு தீர்வு காண உதவலாம்.
தாம் தனித்து விடப்படவில்லை என்ற உணர்வு ஆட்கள் காணாமல்போன குடும்பங்களுக்கு ஏற்பட வேண்டும். அதிகாரிகளும் ஒட்டுமொத்த சமூகமும் இத்தகைய குடும்பங்களின் நிலை அறிந்து, அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உதவி செய்து. காணாமல் போன அன்புக்குரியவர்களை நினைவுகூர்கையில் துணையாக உடன் நிற்பது அவசியம்.
ஐ.சீ.ஆர்.சி ஆனது இலங்கையில் ஆட்கள் காணாமல்போன குடும்பங்களின் உளவியல்-சமூக, பொருளாதார, சட்ட, நிர்வாக ரீதியான தேவைகளை தீர்ப்பதற்குரிய நாடளாவிய நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்துவதுடன், காணாமல்போனவர்களுக்கு நேர்ந்த கதி பற்றி பதிலளிக்கும் பொறிமுறைக்காக பரிந்துரைக்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





