மட்டக்களப்பு பகுதிகளில் மூன்று வாரங்களில் 1600க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று வேகமாக அதிகரித்து வருவதாகவும் கடந்த மூன்று வாரங்களில் 1600க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கோவிட் செயலணியின் விசேட கூட்டம் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஜீ.அருணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் எஸ்.உதயகுமார், மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டியாராட்சி உட்பட பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக கோவிட் தொற்றாளர்களும், அதன் காரணமாக ஏற்படும் மரணங்களும் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் அதனை மீறிச் செயற்படுவது குறித்தும் பொலிஸாரின் பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.








