ஏழு மாதங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநாடு சென்றுள்ளனர்
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிநாட்டு தொழில்களுக்காக புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஜனவரி மாதம் முதல் ஜூலை முதல் வாரம் வரையான காலப்பகுதியில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 179 போர் வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் ஒரு லட்சத்து 767 பேர் அவர்களின் தனிப்பட்ட வழியிலும் 55 ஆயிரத்து 411 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அனுமதிப்பத்திரங்களுடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர்
இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளனர். ஏனையோர் தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு சென்றுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளான குவைத்துக்கு 39 ஆயிரத்து 216 பேரும், கத்தாருக்கு 36 ஆயிரத்து 229 பேரும், சவுதி அரேபியாவுக்கு 26 ஆயிரத்து 98 பேரும் சென்றுள்ளனர்.
அத்துடன் தென் கொரியாவுக்கு 3 ஆயிரத்து 219 பேரும், ஜப்பானுக்கு 2 ஆயிரத்து 570 பேரும் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 27 ஆயிரத்து 937 பேர் வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளனர்.
இவர்களில் 18 ஆயிரத்து 83 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துக்கொண்டு வெளிநாடு சென்றுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அன்றாடம் வாழ்க்கை கொண்டு நடத்துவதில் ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் காரணமாக மக்கள் நாட்டை விட்டு இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.
கடந்த பல மாதங்களாக புதிய கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் கடவுச்சீட்டுக்களை புதுப்பதற்கும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நீண்ட வரிசைகளில் நின்றதை காணக்கூடியதாக இருந்தது.