தொடரும் ஆங்கில கால்வாய் மரணங்கள்! - 27 பேர் நீரில் மூழ்கிய பிறகும் வந்த படகுகள்
ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்ட நிலையில் நீரில் மூழ்கி 27 பேர் உயிரிழந்து ஒரு நாள் கழிந்து ஆங்கிலக் கால்வாயின் குறுக்கே அதிகமான மக்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழன் காலை டோவர் அருகே லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்த ஒரு குழுவினர் படகில் ஒன்றாகக் காணப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நீரில் மூழ்கியவர்களில் 17 ஆண்கள், கர்ப்பிணி ஒருவர் உள்ளிட்ட ஏழு பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகளும் அடங்குவர் என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசமான இந்த படுகொலைகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக டார்மானின் தெரிவித்துள்ளார்.
உயிர் பிழைத்த இருவர் பிரெஞ்சு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அங்கு அவர்கள் கடுமையான தாழ்வெப்பநிலைக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். இவர்களின் ஒருவர் ஈராக்கை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் சோமாலி நாட்டவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்த சம்பவத்தில் 31 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும், அந்த எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, இந்த விடயம் தொடர்பில் பிரெஞ்சுப் பிரதிநிதியிடம் பேசியதாகவும், ஆங்கில கால்வாயில் கூட்டு ரோந்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாகவும் பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் பிரிதி படேல் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை நடந்த சம்பவம் ஒரு பயங்கரமானது ஆனால் ஆச்சரியம் இல்லை என்று அவர் கூறினார்,
"குற்றவாளி கும்பல்களின் கைகளில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் எவ்வாறு ஆபத்தில் தள்ளப்படுகிறார்கள் என்பதை இது நினைவூட்டுகிறது.
"இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் படகுகளில் மக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் காட்சிகள் கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தைக் காட்டுவதாக டவுனிங் வீதி செய்திகள் தெரிவிக்கின்றன.
"பாதிக்கப்படக்கூடிய மக்களை வேட்டையாடும் இந்த பயங்கரமான வர்த்தகத்தை அகற்றுவதற்கு பிரெஞ்சு சகாக்களுடன் நாங்கள் எங்கள் வேலையை முடுக்கிவிட வேண்டும் என்பதை இது விளக்குகிறது" என்று பிரதமரின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறினார்.