மொரட்டுவை துப்பாக்கிச்சூடு! விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்கள்
மொறட்டுவை - சொய்சாபுர பகுதியில் உணவக உரிமையாளர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
நேற்றிரவு (20) காரில் வந்த கும்பல் ஒன்று துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நிலையில், காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் அந்த ஹோட்டலின் உரிமையாளர் என தெரியவருகின்றது.
குற்றக்கும்பலிடமிருந்து மரண அச்சுறுத்தல்கள்
சம்பவத்தில் உயிரிழந்த ஹோட்டலின் உரிமையாளருக்கு சில காலமாக ஒரு குற்றக்கும்பலிடமிருந்து மரண அச்சுறுத்தல்கள் வந்துள்ளமையும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த உணவக உரிமையாளர் 49 வயதான லசந்த குமார உணவகத்திற்குள்ளேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உணவகத்தில் உணவு வாங்க வந்த ஒரு பெண்ணும் காயமடைந்துள்ளார். இதற்கிடையில், 2020 மே 19 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் இந்த உணவகம் தாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஒன்பது நாட்களுக்கு பிறகு, 2020 மே 29 அன்று, அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் உணவகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
பல பொலிஸ் குழுக்கள் விசாரணை
தற்போது துபாயில் பாதுகாப்புப் படையினரின் காவலில் உள்ள ஆல்டோ தர்ம மற்றும் பிரான்சில் பதுங்கியிருந்த குடு அஞ்சு ஆகியோர் மீது இந்த தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், உணவக உரிமையாளரின் கொலையை எந்த குழு நடத்தியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், பல பொலிஸ் குழுக்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.