மொரகஹஹேன துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
மொரகஹஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகாமையில் நேற்று (23) அதிகாலை பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இருவர் உயிரிழந்திருந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இதன்போது உயிரிழந்தவர்கள் பொலிஸாரை நோக்கி சுட்டதாக கூறப்படும் துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மத்தேகொடவைச் சேர்ந்த இமேஷ் தனுஷ்க தர்ஷன் (வயது 36) மற்றும் தனமல்வில பகுதியைச் சேர்ந்த சூரஜ் பிரபோத ஆதிஹெட்டி (42) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
குறித்த முச்சக்கர வண்டியை பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் ஜீப் வண்டியை முச்சக்கரவண்டிக்கு அருகில் நிறுத்திய போது முச்சக்கரவண்டியில் வந்த ஒருவர் ஜீப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட குற்றவாளி
இவ்வாறு உயிரிழந்தவர்கள், 36 வயதுடைய தனுஷ்க தர்ஷன எனவும், இவருக்கு கஹதுடுவ மற்றும் மத்தேகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 2010ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை பல சந்தர்ப்பங்களில் வீடுகள் உடைக்கப்பட்டு சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாக வழக்குகள் உள்ளமையும் தெரியவந்துள்ளது.
இவர் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி என்பதுடன், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்பதும் தெரியவந்துள்ளது.
ஹெரோயின் மற்றும் கஞ்சாவை வைத்திருந்த மற்றும் கடத்தியதற்காக மிரிஹான, மத்தேகொட மற்றும் மொரகஹஹேன பொலிஸ் நிலையங்களில் இவரை கைது செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவத்தில் உயிரிழந்த தனமல்வில பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் பண்டாரநாயக்கபுர மற்றும் மத்தேகொட பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவர் எனவும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 2017ஆம் ஆண்டு முதல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
பிலியந்தலை, தலங்கம மற்றும் தனமல்வில ஆகிய பிரதேசங்களில் ஐஸ் மற்றும் கஞ்சாவை வைத்திருப்பதற்காக 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி கஹதுடுவ பொலிஸாரால் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் பயன்படுத்திய கைத்துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டியை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |