அதிரடிப்படையின் விசேட பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு வருகைதந்த நீதிபதி இளஞ்செழியன்
புதிய இணைப்பு
நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸன் முன்னிலையில் இன்று(24) குறித்த வழக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2017ஆம் நல்லூர் சந்தியில் வைத்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் மற்றைய பாதுகாவலர் படுகாயமடைந்திருந்தார்.
வழக்கு விசாரணை
இது தொடர்பான வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்டனர்.
சாட்சிகள் நெறிப்படுத்தலில் முதலாவது கண்கண்ட சாட்சியாளரான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சாட்சியமளித்துள்ளார்.. சாட்சியினை அரச சட்டத்தரணி நாகரட்ணம் நிஷாந்தன் நெறிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி சர்மினி பிரதீபன் சாட்சியை குறுக்கீடு செய்து கேள்விகளை எழுப்பியிருந்தார்.
துப்பாக்கிச் சூட்டு இடம்பெற்ற போது யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் தற்போது வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதியாகவுமுள்ள நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், சம்பவம் இடம்பெற்ற 2017ம் ஆண்டு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கின் நீதிபதியாக விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தார்.
இந்தக் காலப் பகுதியிலேயே தன்மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று நீதிபதி இளஞ்செழியன் சாட்சியத்தின் போது தெரிவித்துள்ளார்.
இதன்போதே தனது மெய்ப்பாதுகாவலர் எதிரிக் கூண்டில் நிற்கும் எதிரியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று சாட்சியாளரான நீதிபதி இளஞ்செழியன் அடையாளம் காண்பித்துள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது கண்கண்ட சாட்சியாளரான நீதிபதியின் பொலிஸ் மெய்ப்பாதுகாவலரும் எதிரயின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவரும் சாட்சியமளித்தார்.
இதன்படி இரண்டாவது சாட்சியின் சாட்சியத்தை மேல் நீதிமன்ற நீதிபதி
D.S.சூசைதாஸன்
நாளை (25) வரை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக வழக்கு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்கு நீதிபதி இளஞ்செழியன் யாழ் மேல் நீதிமன்றத்திற்கு வருகைதந்துள்ளார்.
அதிரடிப்படையின் விசேட பாதுகாப்புடன் யாழ் மேல் நீதிமன்றத்திற்கு அவர் வருகைத்தந்துள்ளார்.
நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக வழக்கு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்கு நீதிபதி இளஞ்செழியனுக்கு யாழ்.மேல் நீதிமன்றத்தினால் அழைப்பு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றில் சாட்சியம்
இதற்கமைய இன்று(24.04.2024) புதன்கிழமை நீதிமன்றில் சாட்சியம் அளிக்க முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் கடந்த 22.07.2017 அன்று நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |