உலக கட்டடக்கலை வல்லுனர்களால் வடிவமைக்கப்படவுள்ள தமிழினப்படுகொலை நினைவுச்சின்னம்
கனடாவின் பிராம்டன் நகரில் நினைவு தமிழ்ச் சமூகத்தின் ஒன்றிணைந்த முன்னெடுப்பினால் உருவாகிக் கொண்டிருக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்திற்கான வடிவமைப்பு உலகளாவிய ரீதியில் கட்டடக்கலை வடிவமைப்பாளர்களிடமிருந்து போட்டி பரீட்சை மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய "கடைசி இனப்படுகொலை நினைவுச் சின்னம்" என்ற போட்டித் தலைப்பில் கட்டடக்கலை வடிவமைப்பாளர்களுக்கிடையே போட்டி நடத்தப்படவுள்ளது.
கனடிய தமிழ் மக்களின் முழுமையான பங்களிப்புடன் பிராம்டன் நகரசபை, பிராம்டன் தமிழ் ஒன்றியம் மற்றும் பிராம்டன் தமிழ் மூத்தோர் சங்கம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த முயற்சியாக சிறந்த முறையில் செயல் வடிவம் பெறும் இந்த நினைவுச் சின்னத்திற்கான கருத்தியலை பிரபலப்படுத்த உலகெங்கும் வாழும் கட்டடக்கலை வடிவமைப்பாளர்களிடம் (Architects) போட்டி வைத்து நினைவுச்சின்ன வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.
இதற்கு ஐரோப்பாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Bee Breeders என்ற கட்டடக்கலை வடிவமைப்பாளர் அமைப்பு கைகொடுத்துள்ளது.
Bee Breeders முன்னெடுப்பில் சர்வதேச அளவில் International Architecture Competition ஆக நடத்தப்படும் இப்போட்டியின் நடைமுறைகள் தற்போது வெளியாகியுள்ளன.
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த நினைவுத்தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டதனைத் தொடர்ந்து கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றான பிராம்டன் நகரின் நகரசபையில், பீல் பிராந்திய மற்றும் பிரம்டன் நகரசபை வட்டாரம் 3 மற்றும் 4 இன் மக்கள் பிரதிநிதி Councilor Martin Medeiros அவர்களால் பிராம்டன் தமிழ் சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க கொண்டுவரப்பட்ட, 'தமிழ் மக்களுக்கான நினைவுத்தூபி' அமைக்கும் தீர்மானம் ஏகமனதாக 2021 ஜனவரி 20ஆம் நாள் நடைபெற்ற பிராம்டன் நகரசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இலங்கையில் நடந்தது போன்ற இனப்படுகொலை இனிமேல் உலகின் எப்பகுதியிலும் நடக்காதிருக்கச் செய்யும் செயற்பாடுகளுக்கு உந்துதல் தரும் வகையில் இந்த நினைவுத்தூபி அமையவுள்ளது.
இதற்கமைய "கடைசி இனப்படுகொலை நினைவுச் சின்னம்" என்ற போட்டித் தலைப்பில் கட்டடக்கலை வடிவமைப்பாளர்களுக்கிடையே போட்டி நடத்தப்படவுள்ளது.
3.7 மீட்டர் விட்டம் மற்றும் 5.5 மீட்டர் உயரம் கொண்டதொரு இனப்படுகொலை நினைவுத்தூபி சின்னத்தை கட்டடக்கலை வடிவமைப்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
வெற்றி பெற்றதாகத் தேர்ந்தெடுக்கப்படும் வடிவமைப்பிற்கு 10,000 யூரோ பரிசாகத் தரவும் Bee Breeders அமைப்பு முடிவு செய்துள்ளது.
இப்போட்டியின் மூலம் பெறப்படும் ஆகச்சிறந்த வடிவமைப்புகள் கட்டுமானத்திற்காகப் பரிசீலனைக்கு முன்வைக்கப்படும், இதற்காக சர்வதேச அளவில் மதிக்கப்படும் கட்டடக்கலை விற்பனர்கள் ஆறு பேர் நடுவர்களாக பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர்.
போட்டியை நடத்தும் Bee Breeders அமைப்பு ஐரோப்பாவைத் தளமாகக் கொண்டதாக இருந்தாலும், போட்டி வட அமெரிக்கா, ஆசியா உட்பட உலகின் அனைவருக்குமானது.
வடிவமைப்பை சமர்ப்பிப்பதற்கு தொழில்முறைத் தகுதி தேவையில்லை. வடிவமைப்பினை தனியாராக அல்லது அதிகபட்சம் 4 குழு உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களாக இணைந்து உருவாக்கவும் முடியும்.
அதைச் செலுத்த முடியாத நிலையில் வடிவமைப்பில் ஆர்வம் கொண்ட யாராவது இருப்பின் contact@tamilgenocidememorial.org என்ற மின்னஞ்சல் ஊடாகத் தொடர்பு கொண்டு ஆவன செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பதிவு செய்வதற்கான கடைசித் திகதி 2021 நவம்பர் 12ந் திகதியாகும். போட்டி சம்பந்தமான தகவல்களுக்கு The Last Genocide Memorial / Architecture Competition என்ற இணைப்பிற்குச் செல்லவும்.
நினைவுத்தூபி குறித்த மேலதிக தகவல்களை அறிய விரும்புவோர் www.tamilgenocidememorial.org என்ற இணையப்பக்கத்திற்கு சென்று தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த முன்னெடுப்புக்கும், இனப்படுகொலைக்கான நினைவுச்சின்னத்தை சிறப்பான முறையிலும் விரைவாக நிறுவ தாயகத்திலும், புலம்பெயர் உறவுகளிடமும் முழுமையான ஆதரவை அமைப்பாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
மேலதிக தொடர்புகளுக்கு: 647 8730732
https://architecturecompetitions.com/genocidememorial/