கார்த்திகை மாதமும் மாவீரர் நாளும்
கார்த்திகை மாதம் இலங்கையில் வாழும் இரு பிரதான மொழி பேசும் சமூகங்களும் தமது மண்ணுக்காகவும் கொள்கைகளுக்காகவும் உயிர்நீத்த வீரர்களை நினைவுகூரும் ஒரு உணர்வுபூர்வமான காலப்பகுதியாகும். இவை இரண்டும் வெவ்வேறு வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்ட நிகழ்வுகளாக இருந்தாலும், தியாகத்தின் நினைவுகளைச் சுமந்து நிற்கின்றன.
தமிழினம் தமது இனத்தின் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதலாவது மாவீரரான லெப்டினன்ட் சங்கர் (சத்தியநாதன்) மரணித்த நாளான நவம்பர் 27ஆம் திகதியை மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தி ஆண்டு தோறும் நினைவுகூருகின்றது.
மறுபுறம், இலங்கையின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஆயுதமேந்திப் போராடிய ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி), தமது அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான ரோஹண விஜேவீர கொல்லப்பட்ட நாளான நவம்பர் 13ஆம் திகதியை 'கார்த்திகை வீரர்கள் தினமாக' நினைவுகூருகின்றது.
நினைவுகூரும் மாதம்
இந்த இரு இயக்கங்களிலும் தமிழ், சிங்கள, முஸ்லிம் இளைஞர், யுவதிகள் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர் என்பது மறுக்க முடியாத வரலாறு. மத ரீதியாக நோக்கினாலும், நவம்பர் 2ஆம் திகதி உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்கள் தமது இறந்த ஆத்மாக்களை நினைவுகூருகின்றனர்.

அதேபோன்று சைவ மற்றும் இந்து சமய மக்களும் தமது மூதாதையர்களை நினைவில் நிறுத்தி கார்த்திகை தீபம் ஏற்றிப் படையலிட்டு வழிபடுகின்றனர். அந்த வகையில், கார்த்திகை (நவம்பர்) மாதம் என்பது மரணித்தவர்களை நினைவுகூரும் ஒரு புனிதமான மாதமாகவே போற்றப்படுகிறது.
தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டமானது, இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் மேட்டுக்குடியினரின் கைகளிலும், சுதந்திரத்திற்குப் பின்னர் மேட்டுக்குடியினர் மற்றும் மத்தியதர வகுப்பினரின் கைகளிலும், 1970களுக்குப் பின்னர் மத்தியதர வர்க்க இளைஞர்களின் கைகளிலும் சென்றடைந்தது.
ஆரம்பகாலத் தலைவர்கள் தமது கல்வியறிவையும் செல்வத்தையும் கொண்டு பிரித்தானியரிடம் பேரம் பேசி உரிமைகளை வென்றுவிடலாம் என நம்பினர். "ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி, ஆறு கடந்த பின் நீயாரோ நானாரோ" என்ற பழமொழிக்கு ஏற்ப, சுதந்திரத்தின் பின் சிங்களப் பேரினவாதம் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளைப் பறிக்கத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, தமது இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாப்பதற்காக அடுத்த தலைமுறை அகிம்சை வழியிலான மிதவாதப் போராட்டங்களை முன்னெடுத்தது.
ஆனால், அந்த அமைதி வழிப் போராட்டங்கள் அரச பயங்கரவாதத்தினாலும் ஆயுத முனையினாலும் நசுக்கப்பட்ட போது, தமது தலைவர்களுக்கு நேர்ந்த அவமதிப்பையும் இனத்திற்கு நேர்ந்த அவலத்தையும் கண்டு இளம் தலைமுறை ஆயுதமேந்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
ஆயுதப் போராட்டம்
மிதவாதத் தலைவர்களின் சகிப்புத்தன்மை எல்லை கடந்து, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஊடாகத் தனியரசு கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், அதனை நடைமுறைப்படுத்த முடியாத சூழலில் இளைஞர்கள் போராட்டத்தைத் தமது தோள்களில் சுமந்தனர்.

இதன் விளைவாகத் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் அடக்குமுறைகளும் கட்டுப்படுத்தப்பட்டன. இருப்பினும், இந்த ஆயுதப் போராட்டம் 2009 மே மாதம் மௌனிக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி வீரச்சாவடைந்த சங்கரை நினைவுகூரும் வகையில், 1989-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 27 மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
1989 முதல் 2008 வரையான காலப்பகுதியில், மாவீரர் துயிலும் இல்லங்களில் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் சக போராளிகள் ஒன்றிணைந்து மிகவும் உணர்வெழுச்சியுடன் இந்நாளைக் கடைப்பிடித்தனர். தனிப்பட்ட முறையில் தமது பிள்ளைகளை இழந்த சோகத்தில் மூழ்கியிருந்த பெற்றோர்கள் கூட, அந்தக் கூட்டு நிகழ்வில் தமது பிள்ளைகள் இனத்தின் விடுதலைக்காகப் பங்காற்றினார்கள் என்ற பெருமிதத்துடன் துயரங்களை மறந்து சுடரேற்றினர். ஆனால், 2009-க்குப் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது.
மாவீரர்களை நினைவுகூருவது என்பது விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் செயல் என முத்திரை குத்திய கடந்த கால அரசாங்கங்கள், இரும்புக்கரம் கொண்டு நினைவுகூரல்களை அடக்கின. ஆயினும், தடுப்பு முகாம்களில் இருந்த போராளிகள், வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் தமது வீடுகளிலும் ஆலயங்களிலும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சூட்சுமமான முறையில் தமது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.
இறந்தவர்களை நினைவுகூருவது அடிப்படை மனித உரிமை எனச் சர்வதேச சமூகம் வலியுறுத்தியதன் விளைவாகவே, பிற்காலத்தில் சில தளர்வுகள் ஏற்பட்டன. கடந்த காலங்களில், மாவீரர் நாள் நிகழ்வுகளைச் சில அரசியல்வாதிகள் தமது சுயலாபங்களுக்காகவும், தம்மைத் தாமே விடுதலைப் புலிகளின் தலைவர்களாகக் காட்டிக்கொள்ளவும் பயன்படுத்திய கசப்பான சம்பவங்களும் நிகழ்ந்தன. மாவீரர் நாள் என்பது அரசியல் மேடையோ அல்லது வாக்கு வங்கியைத் திரட்டும் நிகழ்வோ அல்ல; அது மண்ணுக்காக மடிந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்கான கூட்டுப் பிரார்த்தனை தினமாகும்.
உணர்வுபூர்வமான அஞ்சலி
அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை என உணர்ந்து மக்கள் எவ்வாறு தமது உரிமைகளுக்காகத் தாமாகவே முன்வந்து போராடுகிறார்களோ, அதேபோல் மாவீரர் நாள் நிகழ்வுகளையும் மக்களே சுயகட்டுப்பாட்டுடன் ஒழுங்கமைக்க வேண்டும். குறிப்பாக, துயிலும் இல்லங்களில் முதன்மைச் சுடரை யார் ஏற்றுவது என்பதில் கூட, உயிர்நீத்த போராளிகளின் பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் முன்னுரிமை அளித்து, அவர்கள் மூலமாக தமது உறவுகளான ஒவ்வொரு மாவீரருக்கும் உணர்வு பூர்வமான அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மாவீரர் நினைவுகூரல் தொடர்பில் ஒரு யதார்த்தமான அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ளது.
வடக்கு, கிழக்கில் மாவீரர் நினைவுகூரல்களை முன்னெடுக்க அனுமதி வழங்கியுள்ளது. விடுதலை புலிகள் இயக்கம் இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அமைப்பாக உள்ளதால் அவர்களது சின்னங்கள் மற்றும் சீருடைகளை பயன்படுத்தாது மரணித்த உறவுகளை நினைவு கூர முடியும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதனால் வடக்கு கிழக்கு பகுதிகள் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு உணர்வு பூர்வ அஞ்சலிக்காக தயாராகியுள்ளது. இருப்பினும் பொலிசார் சில இடங்களில் மாவீரர் தின ஏற்பாடுகளை செய்பவர்களுடன் முரண்பட்ட போதும் தடைகள் ஏதும் இடம்பெற்றதாக தெரியவரவில்லை. இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் இருப்பதாக பதிவாகவில்லை.
நினைவுகூரல் நிகழ்வுகள்
இது கடந்த காலங்களை விட பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைக்கு கிடைத்த ஒரு ஆறுதலே. கடந்த நவம்பர் 13ஆம் திகதி தமது கட்சியின் 'கார்த்திகை வீரர்கள் தினத்தை' உணர்வெழுச்சியுடன் அனுஷ்டித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஆயுதப் போராட்டத்தின் வலியையும் நினைவுகூரலின் உணர்வையும் புரிந்து கொண்டுள்ளமையே இந்த நல்லெண்ணச் சமிக்ஞைக்குக் காரணமாகும்.

அரசாங்கம் வழங்கியுள்ள இந்த அனுமதியையும் வெளிப்படையான சூழலையும் தமிழ் மக்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் கையாள வேண்டும். நினைவுகூரல் நிகழ்வுகள் தேவையற்ற அரசியல் சாயங்களுக்கோ அல்லது தென்னிலங்கை மக்கள் மத்தியில் காழ்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலோ அமையாமல் பார்த்துக்கொள்வது அவசியம். மாறாக, பாதிக்கப்பட்ட மக்கள் தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி மன ஆறுதல் அடையும் ஒரு புனித நிகழ்வாகவே இது அமைய வேண்டும்.
இறுதியாக, மாவீரர்களை நினைவுகூருவதற்கு வழங்கப்பட்டுள்ள இந்த உரிமையைப் போலவே, பல ஆண்டுகளாக நீதி தேடி அழும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்குப் பதிலளிப்பதற்கும், பூர்வீகக் காணிகளை முழுமையாக விடுவிப்பதற்கும், நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும் தற்போதைய அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நினைவுகூரல் உரிமையோடு இணைந்த இத்தகைய நீதியான செயற்பாடுகளே இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப வழிவகுக்கும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 26 November, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.