ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு கோரி இரவு முழுவதும் அமைச்சை முற்றுகையிடும் பிக்குமார்
புதிய இணைப்பு
கலகொட அத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வலியுறுத்தி தற்போதைக்கு புத்த சாசன அமைச்சை முற்றுகையிட்டுள்ள பிக்குமார், இன்றைய இரவை அங்கேயே கழிக்க உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இன்று காலை ஜனாதிபதி அலுவலகம் அருகில் நடைபெற்ற பிக்குமாரின் சத்தியாக்கிரக எதிர்ப்பு நடவடிக்கைக்கு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தடை உத்தரவு விதித்திருந்தது.
அதனையடுத்து கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலையாகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க பிக்குமார் பேரணியாகத் திரண்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தை நோக்கி புறப்பட்டிருந்தனர்.
எனினும் சட்டத்தரணி ஒருவர் ஊடாக அவர்கள் முன்வைத்த நகர்வு மனு நீதிமன்றத்தினால் இன்றைய தினம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
அதனையடுத்து இடைவழியில் தங்கள் பயணத்தை திசைமாற்றிய பிக்குமார் தற்போது புத்தசாசன அமைச்சை முற்றுகையிட்டு பலவந்தமாக அங்கு தங்கியுள்ளனர்.
பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளரைச் சந்தித்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை அவ்விடத்திலிருந்து நகரப் போவதில்லை என்றும் பிக்குமார் அறிவித்துள்ளனர்.
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குமாருக்கு உணவு மற்றும் குளிருக்குப் பொருத்தமான ஆடைகளை அன்பளிப்புச் செய்யுமாறும் அவர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தகவல்- அனதி
மூன்றாம் இணைப்பு
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பொலிஸார், திடீரெனத் தமது பயணத் திட்டத்தை மாற்றி, கொழும்பு 7இல் அமைந்துள்ள புத்தசாசன அமைச்சை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, பொலிஸார் அனைவரும் விரைவாக அந்தப் பகுதியை நோக்கிச் செல்வதை அவதானிக்க முடிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவர்கள் பௌத்த மற்றும் சமய விவகாரங்கள் அமைச்சில் நடைபெறும் கூட்டமொன்றில் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து அவர்கள் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் முகாமமைத்து தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகள், தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் டில்சான் வின்சன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பிக்குகள் நீதிமன்றத்தை நோக்கிச் செல்வதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகள், தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக எமது செய்தியாளர் டில்சான் வின்சன் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தைத் தொடர்ந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மத்தியில், பிக்குகள் நீதிமன்றம் நோக்கிப் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் பிக்குகள் கொண்டு வந்திருந்த பொருட்களை அகற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.