இலங்கையின் கீர்த்தி பெற்ற காவன்திஸ்ஸ யானை உயிரிழப்பு
வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் நடமாடித் திரிந்த இலங்கையின் மிக உயரமானதும், நீளமான கொம்புகளைக் கொண்டதுமான காவன்திஸ்ஸ யானை இன்று மாலை உயிரிழந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காரணமாக நீண்டநாட்களாக அவதிப்பட்டு வந்த இலங்கையின் கீர்த்திமிகு காவன்திஸ்ஸ யானைக்கு சிகிச்சையளிக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தீவிர சிகிச்சை
காவன்திஸ்ஸ யானை பெரும்பாலும் கல்கமுவைப் பிரதேசத்தை மையமாக கொண்டு வாழ்ந்து வந்த அதே வேளை அண்மைக்காலத்தில் பொதுமக்களினால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு காட்டு யானையாகும்.
யானையின் முன்புற வலது காலில் காணப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயத்துக்கு கடந்த 24ம் திகதி தொடக்கம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று காலை சியம்பலன்கமுவ பிரதேசத்தின் வயல்வெளியொன்றில் காவன்திஸ்ஸ யானை ஒருக்களித்து வீழ்ந்திருந்த நிலையில் காணப்பட்டது.
அதனையடுத்து யானை கடுமையாக சுகவீனமுற்றிருப்பதாக அறிவித்த வனசீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், கால்நடை மருத்துவரக்ளின் உதவியுடன் அதற்கான தீவிர சிகிச்சைகளை முன்னெடுத்திருந்தனர்.
எனினும் கடந்த சில நாட்களாகவே சரிவர உணவை உட்கொள்ளாத நிலையில் பலவீனப்பட்டுக் காணப்பட்ட காவன்திஸ்ஸ யானை இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.