சிறையிலிருக்கும் பௌத்த துறவிகள் வெளியே அழைத்து வரப்படும் போது காவி உடை அணிய அனுமதி - கொண்டுவரப்படும் அதிரடி மாற்றம்
சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்து வரப்படும் பௌத்த பிக்குகள் காவி உடையை அணிவதற்கு முழுமையான அனுமதி வழங்கும் வகையில், சிறைச்சாலைகளின் நிரந்தரக் கட்டளைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழுள்ள விதிமுறைகள் மற்றும் நிரந்தரக் கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகள் சிறையில் அடைக்கப்படும் சந்தர்ப்பங்களில் காவி உடையை அகற்றுவது மற்றும் சிறையிலிருந்து வெளியில் அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் காவி உடையை அணிவது தொடர்பான விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தேரர்களுடன் கலந்துரையாடல்
கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டபோது ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பில், ஜனாதிபதி தலைமையில் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழுள்ள விதிமுறைகள் மற்றும் நிரந்தரக் கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. சேனாதீர தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, சிறைச்சாலைகளின் நிரந்தரக் கட்டளை இலக்கம் 356 இல் திருத்தம் மேற்கொண்டு, 356(அ) என்ற புதிய பிரிவைச் சேர்ப்பதற்கும், திணைக்களக் கட்டளை இலக்கம் 550இல் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, பௌத்த பிக்கு ஒருவர் கைதியாகச் சிறையில் அடைக்கப்படும் சந்தர்ப்பத்தில், அவர் அணிந்திருக்கும் காவி உடையை அகற்றுவது தொடர்பில் பௌத்த அலுவல்கள் திணைக்களத்துக்கு அறிவித்து, அதற்கமைய நடவடிக்கை எடுப்பதற்காகச் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விதிமுறை மாற்றியமைப்பு
அத்துடன், ஏனைய மதங்களைச் சேர்ந்த மதகுருமார்கள் சிறையில் அடைக்கப்படும் சந்தர்ப்பங்களிலும், அந்தந்த மதங்களுக்கு ஏற்ற வகையில் இந்த விதிமுறைகளை மாற்றியமைத்துப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பௌத்த பிக்குகள் ஏதேனும் காரணத்திற்காகச் சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில், காவி உடையை அணிந்திருப்பதற்கு முழுமையான அனுமதி வழங்கும் வகையிலும் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பௌத்த பீடம் அல்லது வேறு பௌத்த பீடங்களில் இருந்து அதற்கு எதிரான அறிவிப்பு கிடைக்கும் வரை இந்த அனுமதி நடைமுறையில் இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திருத்தங்களின் அடிப்படையில், நடைமுறையிலுள்ள நிரந்தரக் கட்டளைகளை மாற்றியமைக்குமாறு பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam