குரங்கு காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கோவிட் தொற்றுடன் ஒப்பிடும் போது குரங்கு காய்ச்சலானது குறைவான வேகத்தில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் நேற்றைய அறிவிப்பு இந்த நோயை சர்வதேச பொது சுகாதார அவசரநிலை என்று மட்டுமே அறிவித்ததுடன், தொற்றுநோய் அளவிலான அச்சுறுத்தல் அல்ல என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உயிரணு உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், PCR பரிசோதனையின் மூலமும் குரங்கு காய்ச்சலைக் கண்டறிய முடியும்.
குரங்கு காய்ச்சல் வைரஸின் வரலாறு குறித்துப் பேசிய பேராசிரியர், இந்த நோய் முதன்முதலில் 1958 இல், ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் குரங்குகளில் கண்டறியப்பட்டது என்றார்.
நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்களிடையே நோய் பரவும்
சுவாச அமைப்பு, சளி அல்லது தோலுடன் தொடர்பு கொள்வதன் மூலம் வைரஸ் பரவும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இது விலங்குகள் மூலமாகவோ அல்லது மனிதர்கள் மூலமாகவோ பரவக்கூடும் என்றும் பேராசிரியர் குறிப்பிட்டார்.
நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்கள் ஒரே தட்டு, கோப்பை அல்லது பிற தனிப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
காய்ச்சல், கட்டிகள் மற்றும் சிக்குன் குனியா போன்ற தோல் வெடிப்புகள் குரங்கு காய்ச்சலின் சில அறிகுறிகளாகும் என்றும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர விளக்கினார்.
வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு வெற்றிகரமான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் உள்ளன என்றும், அவை தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் உறுதியளித்தார்.
குரங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணியுமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
