மர்மமான முறையில் இறந்து கிடந்த விகாராதிபதி
இரண்டாவது இணைப்பு
சீதுவை – வேத்தேவ பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், விகாரையில் இருந்து தப்பிச் சென்ற பிக்குவை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் இன்று அதிகாலை துபாய் செல்ல முயற்சித்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 வயதான இந்த பிக்கு தற்போது சீதுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலும் சில சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், விகாரையில் இருந்த சந்தேகத்திற்குரிய பிக்குவுடன் இருந்த ஒரு டிஃபெண்டர் வாகனமும் மற்றுமொரு காரும் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணைகளின்போது சந்தேகத்திற்குரிய பிக்கு இரண்டு வாகனங்களையும் இரண்டு
நபர்களுக்கு 14 மில்லியன் ரூபாய்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
முதலாவது இணைப்பு
சீதுவை - வேத்தேவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் 50 வயதான விகாராதிபதி விகாரைக்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து காணப்பட்ட நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு மக்கள் வழங்கிய தகவல்
விகாரையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொது மக்களின் வழங்கிய தகவலுக்கு அமைய சீதுவை பொலிஸார் விகாரைக்கு சென்றுள்ளனர்.
பொலிஸார் விகாரைக்கு சென்ற போது விகாரையில் எவரும் இருக்கவில்லை. இதனையடுத்து விகாராதிபதியின் உடல் அவரது அறையில் கட்டிலில் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
விகாராதிபதியின் கைகள் கட்டப்பட்டிருந்ததுடன் வாயில் துணி திணிக்கப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாருக்கும் தெரியாமல் விகாரையில் இருந்து வெளியேறிய பிக்கு
இந்த விகாரையில் மற்றுமொரு பிக்கு ஒருவர் வசித்து வந்துள்ளதுடன் அவர் யாரிடம் அறிவிக்காது அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் விகாரையில் இருந்து ஆடம்பர வாகனமும் சிறிய வாகனம் ஒன்றும் காணாமல் போயிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விகாராதிபதியை கொலை செய்து விட்டு, வாகனங்கள் கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் விகாரையில் இருந்து வெளியேறியதாக கூறப்படும் பிக்குவையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.