பொருளாதார நெருக்கடியினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தில் கூடிய துறைசார் கண்காணிப்புக் குழு
பொருளாதார நெருக்கடியினை கட்டுப்படுத்துவதற்கான துறைசார் கண்காணிப்புக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் நாடாளுமன்றத்தில் இன்று (05.12.2023) கூடியுள்ளது.
இலங்கை கடன் தகவல் பணியகம் (CRIB) மற்றும் லோஹார் ஆர்யா கடன் நிதி ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகளும் மேற்குறிப்பிட்ட கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கை கடன் தகவல் பணியகத்தின் அதிகாரிகள் தமது நிறுவனத்தின் வகிபாகம் குறித்து விளக்கமளிக்கையில், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி விவகாரங்கள் குறித்த தகவல்களை மட்டுமே தமது நிறுவனம் வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.
வலேபொட சிபாரிசு
இதன்போது, நாட்டின் வங்கி மற்றும் நிதி முறைமையை ஒழுங்கான முறையில் பேணுவதில் இலங்கை கடன் தகவல் பணியகத்தின் முக்கியத்துவத்தை காமினி வலேபொட சுட்டிக்காட்டி பாராட்டியுள்ளார்.
எனினும் கடனை மீள்செலுத்த முடியாத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வங்கிகள் கடன்களை வழங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றும் காமினி வலேபொட சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு மேலதிகமாக மதிப்பீட்டு அறிக்கை ஒன்றினை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை தயாரிக்குமாறும் இலங்கை கடன் தகவல் பணியகத்திற்கு வலேபொட சிபாரிசு செய்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கடன்களை அங்கீகரிக்கும் சட்டங்களில் விரைவில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அதற்குத் தேவையான ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களால் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு கடன்
பொதுமக்களுக்கு இலங்கை கடன் தகவல் பணியகம் பற்றிய புரிதலை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலேபொட ஆலோசனை வழங்க, எதிர்காலத்தில் CRIB என்ற வார்த்தையை மாற்றுவது குறித்து கவனம் செலுத்தி வருகிறோம் என CRIB அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை லோஹார் ஆர்யா கடன் நிதி நிறுவனம், தங்களுடைய நிறுவனத்தை அரச ஊழியர்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் நிறுவனமாக மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை தெளிவுபடுத்தியுள்ளது.
அதன்படி, சட்டங்களை திருத்தியமைத்து 2024ஆம் ஆண்டில் 10 இலட்சம் அரச ஊழியர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை தொடங்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான குழுவொன்றினை அமைப்பதற்கு காமினி வலேபொட அறிவுறுத்தினார்.

பிரித்தானிய விசா நடைமுறைகளில் அதிரடி மாற்றம்: புலம்பெயர்வோருக்கு ஏற்படவுள்ள சிக்கல் - பிரித்தானியப் பிரதமர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |