புதையலுக்குள் சிக்கிய ராஜபக்ச குடும்பம் - அணைக்கட்டுக்குள் இருந்து வெளிவரும் பூதம்
மொனராகலை குளம் உடைக்கப்பட்டதன் பின்னணியில் ராஜபக்சர்களின் புதையல் தேடும் நடவடிக்கை உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உரையாற்றும் போது பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதையல் தோண்டும் நடவடிக்கை
மொனராகலை மாவட்டத்தின் மதகம பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கல்கமுவ கிராம நிலதாரி பிரிவில் அமைந்துள்ள பாலேகந்த குளத்தை புனரமைப்பதற்காக, அதன் அணைக்கட்டு 2020 மே மாதத்தில் உடைக்கப்பட்டது.

குளத்தின் புனரமைப்பு பணிகளுக்காக ஆரம்பத்தில் 82.2 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும் பின்னர் அது 167.26 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது.
அரசாங்கம் இதுவரை இத்திட்டத்திற்காக 70.5 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அலவலக அறிக்கைகளின்படி, குளத்தின் புனரமைப்புப் பணிகளில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் சமகால அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் குமார தெரிவிக்கையில், அண்மையில் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின்படி, இதுவரை செலவிடப்பட்டுள்ள 70.5 மில்லியன் ரூபாய்க்கு இணையான எந்தவொரு பணியும் அங்கு நடைபெறவில்லை எனக் குறிப்பிட்டார்.
ஷஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம்
முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்படும் இந்த புதையல் தேடும் மோசடியை மறைப்பதற்காகவே இந்த புனரமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அது குறித்த விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இத்திட்டம் சுமார் ஆறு வருடங்களாக முடங்கியுள்ளதால், தமது வாழ்வாதாரத்திற்காக இக்குளத்தை நம்பியிருந்த நூற்றுக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.