ஈரானின் உச்ச தலைவர் தொடர்பில் வெளியாகும் வதந்திகள்..! முதல் முறையாக ஈரானிடமிருந்து வந்த பதில்
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமனெய் கடுமையாக காயமடைந்து பல அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதாக வெளியான தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்தநிலையில், அவருக்கு காதின் பின்னால் சிறிய கீறல் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்று ஈரான் தரப்பில் முதல் முறையாக அதிகாரப்பூர்வ விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
மொஜ்தபா காமனெய்
ஈரானின் அரைஅதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான பார்ஸ் நியூஸ் ஏஜென்சி வெளியிட்ட தகவலில், உச்ச தலைவர் முழுமையான உடல்நலத்துடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், அவரின் முதுகு காயம் தற்போது மேம்பட்டுள்ளது. முழங்கால் காயமும் விரைவில் குணமாகும். அவர் முழு நலத்துடன் உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், எதிரிகள் பல்வேறு வதந்திகளையும் பொய்யான தகவல்களையும் பரப்பி வருகின்றனர்.

மக்கள் அவசரப்பட தேவையில்லை. சரியான நேரத்தில் அவர் நேரடியாக பேசுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச தலைவரின் அலுவலக நடைமுறைப் பொறுப்பாளர் மசாஹெர் ஹொசைனி கூறுகையில், காதின் பின்னால் சிறிய கீறல் மட்டுமே ஏற்பட்டுள்ளது.
பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றார். இதற்கிடையில், ஈரானின் ஐஎஸ்என்ஏ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், சுகாதார அமைச்சக அதிகாரி ஹொசைன் கெர்மான்பூர், மிகவும் ஆபத்தான நிலை எதுவும் ஏற்படவில்லை.
இந்த காயங்கள் முகத்தை சேதப்படுத்தவோ அல்லது உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட வேண்டிய நிலையை உருவாக்கவோ செய்யாது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடரும் அதிரடி மாற்றங்கள்..! முதலமைச்சர் விஜயின் புதிய உத்தரவு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அறுவை சிகிச்சை
அவர் மேலும், சில காயங்களுக்கு தையல் போடப்பட்டது. குறிப்பாக காலில் ஏற்பட்ட காயத்திற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் கூறினார்.
ஆனால் இதற்கு முன்பு தி நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட தகவலில், மொஜ்தபா காமனெய் கடுமையாக காயமடைந்திருந்தாலும் மனதளவில் தெளிவாக உள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில், அவரது ஒரு காலில் மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், எதிர்காலத்தில் செயற்கைக் கால் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மெதுவாக செயல்பாடு திரும்பி வருவதாகவும், முகம் மற்றும் உதடுகளில் கடுமையான தீக்காயம் ஏற்பட்டதால் பேசுவதில் சிரமம் இருப்பதாகவும் கூறப்பட்டது.
அதோடு, அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி கூட தேவைப்படலாம் என்ற தகவலும் வெளியாகியிருந்தது.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான்
இதுகுறித்து தி டெலிகிராப் வெளியிட்ட தகவலின்படி, பெப்ரவரி 28ஆம் திகதி இஸ்ரேலின் புளூ ஸ்பேரோ ஏவுகணைகள் தாக்குதல் நடத்திய போது, மொஜ்தபா காமனெய் சில விநாடிகள் வித்தியாசத்தில் உயிர்தப்பியதாக கூறப்படுகிறது.
அந்த தாக்குதலின் போது அவர் கட்டிடத்துக்கு வெளியே இருந்ததாகவும், மீண்டும் மேல்தளத்திற்கு சென்று கொண்டிருந்தபோது ஏவுகணை தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் அவரது மனைவி ஹத்தாத் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான், கடந்த வியாழக்கிழமை ரகசிய இடத்தில் மொஜ்தபா காமனெயை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
அவரின் தொலைநோக்கு சிந்தனையும் எளிமையான அணுகுமுறையும் என்னை மிகவும் கவர்ந்தது என்று அவர் கூறியுள்ளார்.
தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அலி காமனெய் போரின் முதல் நாளில் கொல்லப்பட்டதையடுத்து, மொஜ்தபா காமனெய் புதிய உச்ச தலைவராக பதவி ஏற்றார். அதன்பிறகு அவர் இதுவரை பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.