சீனாவின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை! இந்திய பெருங்கடல் தொடர்பில் அநுரவின் உறுதி
இலங்கையின் நிலத்தையோ அல்லது அதைச் சுற்றியுள்ள பெருங்கடல்களையோ இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கும் வகையில் வேறு தரப்பினருக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் இலங்கை மேற்கொண்ட பாதுபாகப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி(Vikram Misri) மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு
“இந்தியாவும் இலங்கையும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு நலன்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது இரு நாடுகளும் ஏழு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது, தற்போதுள்ள பாதுகாப்பு கூட்டாண்மைக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என நம்பப்படுகிறது.
இந்தியாவின் நலன்
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கைப் பிரதேசம் இந்தியாவின் நலன்களுக்கு விரோதமான அல்லது தீங்கு விளைவிக்கும் எந்த வகையிலும் பயன்படுத்தப்படாது அல்லது பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது, இலங்கையின் நிலத்தையோ அல்லது அதைச் சுற்றியுள்ள பெருங்கடல்களையோ இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சீன உளவு கப்பல் சர்ச்சையை தொடர்ந்து பல மாதங்களுக்குப் பிறகு, மோடியிடம் அநுர இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே முதன்முறையாக பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதன் பின்னணி இதுதான்.
மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை மேலும் கட்டமைக்கும் ஒரு குடை கட்டமைப்பு ஆவணமாகும்.என்று மிஸ்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. ஏனெனில் அது தனது புவிசார் அரசியல் செல்வாக்கு மண்டலத்திற்குள் இருப்பதாக இந்தியா கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |