ஜனாதிபதி அநுரவுக்கு மோடி மேற்கொண்ட அழைப்பு.. இலங்கையை மீட்பதில் இந்தியாவின் முக்கிய பங்கு!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அழைப்பை மேற்கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிற்கு பதிலளிக்கும் விதமாக இலங்கைக்கு தொடர்ந்து சர்வதேச மனிதாபிமான ஆதரவு கிடைத்து வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உடனடி அவசரகால மீட்பு முயற்சிகளில் இந்தியா முன்னணிப் பங்காற்றியுள்ளது.
இயற்கை பேரழிவால், நாடு முழுவதும் கணிசமான உயிர் இழப்பு, பரவலான அழிவு மற்றும் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்தியாவின் உறுதிநிலை
மீட்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதால், நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் ஒற்றுமையை வெளிப்படுத்தி அவசரகால நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிப்பதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஒபரேசன் சாகர் பந்துவின் கீழ் தொடர்ந்து ஆதரவளித்து, இலங்கைக்கு ஆதரவாக இந்தியா உறுதியாக நிற்கிறது என்பதை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
பல இந்திய கடற்படை மற்றும் விமானப் படைகள் ஏற்கனவே அவசரகால பொருட்களை வழங்கியுள்ளன, மேலும் கூடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உலக உணவுத் திட்டம் மூலம் கரைகளை வலுப்படுத்த 20,000 பாலிசாக்குகளை வழங்குவதன் மூலம் அமெரிக்கா தனது மனிதாபிமான பங்களிப்பை வலுப்படுத்தியது.

டிசம்பர் 04 ஆம் திகதியன்று, கூடுதல் நிவாரணக் குழுக்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் இரண்டு விமானங்கள் வரவுள்ளன. உடனடி நடவடிக்கை மற்றும் ஆரம்பகால மீட்பு முயற்சிகளுக்காக அவுஸ்திரேலியா 1 மில்லியன் டொலர்களை உறுதியளித்துள்ளது.
அதே நேரத்தில் நேபாளம் 200,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. பாகிஸ்தான்,ஜப்பான் ஐக்கிய அரபு ராச்சியம், மாலைத்தீவுகள், சீனா, துருக்கி, கியூபா, பங்களாதேஷ் ஐரோப்பிய ஒன்றியம், பாலஸ்தீனம், மற்றும் நிகரகுவா போன்ற நாடுகளும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |