கச்சத்தீவு விவகாரம்: ஸ்டாலின் தரப்பை கடுமையாக சாடிய நிர்மலா சீதாராமன்
கச்சத்தீவு (Kachchatheevu) விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடியும் (Narendra Modi), திராவிட முன்னேற்றக்கழகத்தை இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும்(Nirmala Sitharaman) கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
தமிழக பாரதீய ஜனதாக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்களை கொண்டே இந்த விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தகவல்களின்படி, இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவு தற்போது இலங்கைக்கு சொந்தமாகியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இடம்பெற்றபோதே கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு பிரச்சினை
தற்போது கச்சத்தீவு பிரச்சினையால் தமிழக கடற்றொழிலாளர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் சேர்க்க வேண்டும் என தமிழக கடற்றொழிலாளர்கள் நீண்டகாலமாக கூறி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் இன்று பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் கச்சத்தீவு பற்றி விமர்சனக் கருத்துகளை தெரிவித்துள்ளார்
“கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் எப்படி விட்டு கொடுத்தது என்பதற்கு புதிய ஆதாரம் கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, நலன்களை பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் 75 ஆண்டு கால செயல்திறனாக உள்ளது.
எனவே காங்கிரஸை எப்போதும் நம்பக்கூடாது என்று மக்கள் மனதில் உறுதியான நம்பிக்கை உள்ளது.
கச்சத்தீவில் இந்திய கடற்படை
கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியர்கள் ஒவ்வொருவரையும் காங்கிரஸ் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது." என தெரிவித்துள்ளார்.
இலங்கை, சுதந்திரத்திற்குப் பிறகு கச்சத்தீவில் தனது உரிமையை வலியுறுத்தியது. கச்சத்தீவில் இந்திய கடற்படை (அப்போதைய ரோயல் இந்திய கடற்படை) தனது அனுமதியின்றி பயிற்சிகளை நடத்த முடியாது என்று அந்த நாடு கூறியது.
முன்னாள் பிரதமர் நேரு, 1961 மே 10ம் திகதியன்று கச்சத்தீவுக்கு, தாம் எந்த முக்கியத்துவமும் தரவில்லை. அதற்கான உரிமையை விட்டுத்தர தயங்கமாட்டேன் என கூறியுள்ளார்.
எனினும் நேருவின் முடிவு எதிர்மாறாக இருந்தது. 1968 இல், இலங்கை பிரதமர் சேனநாயக்காவுடன் பேசியதற்காக இந்திரா அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி இருந்தன.
1973ல் இந்தியா - இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலை அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் கேவால் சிங் தெரிவித்திருந்தார். அப்போது ராமநாதபுரம்(ராம்நாட்டின்) மன்னருக்கு கச்சத்தீவின் உரிமை உள்ளது என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை
அத்துடன் இலங்கை பிரதமர் சிறிமாவோ, டெல்லி வந்து இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் மத்திய அரசு தன்னிச்சையாகவே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு 1974ல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்ற விபரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்; திராவிட முன்னேற்றக்கழகத்தை சாடியுள்ளார்.
கச்சத்தீவு பற்றிய முழு விபரம் 1974ஜுன் மாதம் அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டது.
எனவே இன்று வரை கச்சத்தீவு பற்றி உண்மைக்கு புறம்பாக பிரசாரம் செய்து வரும் திராவிட முன்னேற்றக்கழகம் இதற்கு பதிலளிக்க வேண்டும். கச்சத்தீவை காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்து தாரை வார்த்துவிட்டு, பிறரை கேள்வி கேட்கும் போக்கு மிகவும் தவறானது என்று நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.
கச்சத்தீவை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திராவிட முன்னேற்றக்கழகம் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருவதையும் சீத்தாராமன் கோடிட்டு காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |