விவசாயிகளிடையே ஏற்பட வேண்டிய மனநிலை: கிளிநொச்சி அரசாங்க அதிபர் விளக்கம்
விவசாயிகளிடம் நவீனமயப்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்கின்ற மனநிலை ஏற்படவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று(11.09.2025) நடைபெற்ற விவசாய உபகரணங்கள் மற்றும் உள்ளீடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பாரம்பரிய விவசாய நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டு நவீன நடைமுறைகளுக்கு மாற வேண்டியது காலத்தின் தேவையாகும். ஏனெனில் எதிர்காலங்களில் நிலம் மற்றும் நீர் வரையறுக்கப்படும்.
நவீன விவசாய முறைகள்
எனவே நவீன விவசாய முறையில் இவற்றை சிக்கனமாக பயன்படுத்த முடியும். சிறிய நிலப்பகுதியில் குறைந்தளவு செலவு மற்றும் உள்ளீடுகளை பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெற முடியும்.
இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வலுப்படுத்தும். இன்றையதினம் வழங்கும் கருவிகள் இதற்காகவே வழங்கப்படுகின்றன. இதற்கான தொழில்நுட்ப உதவிகளும் பரவலாக வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, இதனை சரியாக தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும். எமது மாவட்டச் செயலக வளாகத்தில் கூட நவீன விவசாய முறைகளை பின்பற்றி மிளகாய் மற்றும் தக்காளி செய்கையினை சிறிய நிலத்தில் மேற்கொண்டு அதிக விளைச்சலைப் பெற்றுக்கொண்டுள்ளோம்.
முயற்சியாளர்கள்
மேலும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் சமூக வலுவூட்டல் அமைச்சின் 65 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் 10 பச்சை வீடுகளை அமைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி சிறிய விவசாய சமூகம் ஒன்றை பரீட்சார்த்தமாக ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம்.
இதற்கு 30 விவசாயிகள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், தற்போது வரை 100 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களிலிருந்து முயற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு ஊக்குவிக்கப்படுவார்கள்.
இதனூடாக நவீனமயப்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்க இது உந்துசக்தியாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




