மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற திருட்டு.. இருவர் கைது!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணம் என்பவற்றை திருடி சென்ற நபர் மற்றும் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் உட்பட பலரின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணம் என்பவற்றை திருடி வந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரும் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (13) இரவு ஏறாவூரில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட 18 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட பொருட்கள்
இது பற்றி தெரியவருவதாவது, மட்டு போதனா வைத்தியசாலையில் நோய்க்காக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு உதவியாக இருந்த பெண் ஒருவரின் கைப்பையில் வைத்திருந்த கையடக்க தொலைபேசி மற்றும் 10 ஆயிரம் ரூபா பணத்துடன் கைப்பை திருட்டு போனமை தொடர்பாக கடந்த 3 தினங்களுக்கு முன்னர் மட்டு. தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த திருட்டு தொடர்பாக சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் ஏறாவூர் பிரதான வீதியில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் இளைஞன் ஒருவர் 5 கையடக்க தொலைபேசிகளை கொண்டு சென்ற அதன் இரகசிய எண் கொண்ட பூட்டு உடைத்து தருமாறு அந்த கடை உரிமையாளரிடம் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து உடனடியாக சம்பவ தினமான நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்ட பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்து விசாரணையின் போது தொலைபேசிகளை மட்டு. போதனா வைத்தியசாலையில் திருடி உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
தொடர்ந்து, கடை உரிமையாளர் உட்பட இருவரையும் கைது செய்ததுடன் திருடப்பட்ட 18 கையடக்க தொலைபேசிகள் மற்றும் கனணி ஒன்று உட்பட உபகரணங்களை மீட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

