மித்தெனிய கொலைச் சம்பவம் : சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு
மித்தெனியவில் அண்மையில் இடம்பெற்ற மூன்று கொலைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக 72 மணி நேரம் தடுத்து வைக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (18) இரவு ஆறு வயது சிறுமி மற்றும் ஒன்பது வயது சிறுவன் உட்பட மூன்று நபர்களின் மரணம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் அதிகாரி கைது
விசாரணையின் போது, குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் இரண்டு கைவிலங்குகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவை ஒரு பொலிஸ் அதிகாரியுடையது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் விளைவாக தங்காலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 35 வயதுடைய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை இரவு மித்தேனிய கடேவத்த சந்திக்கு அருகில் தனது இரண்டு குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மகனும் மகளும் எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஆறு வயது மகள் உயிரிழந்ததோடு, ஒன்பது வயது மகன் மறுநாள் இறந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |