மோடிக்கான வரவேற்பு பதாகைகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு! உடனடியாக அநுர அரசு செய்த மாற்றம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு கொழும்பு காலி முகத்திடலில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த பதாகைகளில், சமூக ஊடகப் பயனர்கள் இலக்கணப் பிழைகள் மற்றும் தமிழ் விடுபட்டதை முன்னிலைப்படுத்தியதை அடுத்து, அவை உடனடியாக திருத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
தமிழ் மொழி புறக்கணிப்பு
எனினும் திருத்தங்களுக்கு பிறகும் அந்த பதாகைகளில் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் தமிழ் மொழிக்கு வழங்கப்படவில்லை.
அத்துடன் ஒரு பதாகையில் மாத்திரம் 'வணக்கம்' என்று தமிழ் மொழியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை ஜேவிபி தலைமையிலான நிர்வாகம் இந்த பிரச்சினையை நியாயப்படுத்துவதையோ அல்லது புறக்கணிப்பதையோ விட, ஒப்பீட்டளவில் இந்த பிரச்சினையை விரைவாகக் கவனித்ததற்காக வழக்கறிஞர் என்.கே. அசோக்பரன் பாராட்டியுள்ளார்.
மேலும் இலங்கையில் பொது நிகழ்வுகள் நடைபெறும் போது தமிழ் மொழி இதுபோன்று பல சந்தர்ப்பங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.