விடுதலைப் புலிகளின் உறுப்பினர் பாலகுமாரன் உள்ளிட்ட போராளிகளுக்கு நடந்தது என்ன: மன்றில் சிறீதரன் சீற்றம்
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான பாலகுமாரன் அவரது மகன் சூரியகுமாரன் உட்பட பல போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர் எனவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இராணுவமோ அரசாங்கமோ இதுவரை வெளியிடவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(10.01.2024) நடைபெறும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் வரலாறு
3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்.
60ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் துடைத்தெறியப்பட்டுள்ளனர். ஜே.வி.பியின் 60ஆயிரம் வரையிலான போராளிகளும் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் வரலாறு ஒரு இரத்தம் படிந்த வரலாறு ஆகும். பலமுறை இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதாக அரச தலைவர்கள் கூறினார்கள்.
ஆனால், இவ்வித மாற்றங்களையும் செய்யவில்லை. இராணுவத்திடம் சரணடைந்தவர்களுக்கு இன்றுவரை என்ன நடந்ததென தமிழ் மக்கள் தெரியாதுள்ளனர்.
அவர்களது உறவுகள் இன்றும் நீதிக்காக போராடுகின்றனர். அருட்தந்தை பிரான்ஸிஸ் தலைமையில் பல போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர்.
இதனை கண்கண்ட சாட்சியங்களும் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு என்ன நடந்ததென தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான பாலகுமாரன் அவரது மகன் சூரியகுமாரன் உட்பட பல போராளிகள் சரணடைந்தனர்." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |