காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்..!
நீதி கிடைப்பதே எமது முதன்மை இலக்கு. நீதி கிடைத்த பின்னரே நாங்கள் நிதியைப் பற்றிச் சிந்திப்போம் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் நேற்று (26) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும்,"ஒரு சரியான தீர்வை நோக்கியே நாங்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். நீதி என்பது கடையில் கொடுத்து வாங்கும் பொருள் அல்ல.
பல போராட்டங்கள்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் எமக்கு வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களும் நிதித் தேவைகளும் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நீதிக்கு முன்னால் அந்த நிதி எமக்கு பெரிதல்ல.

இலங்கை அரசாங்கமானது எங்களை எவ்வாறாவது தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் தள்ளி, வழக்கை முடிக்கப் பார்க்கிறது. உலகளவில் பல்வேறு நாடுகளிலும் பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
சில நாடுகளுக்கு 30, 40 வருடங்களுக்குப் பிறகே தீர்வுகள் கிடைத்துள்ளன. நாங்களும் கடந்த 17 வருடங்களுக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வருகின்றோம்.
எமது இலக்கை அடைய 15 முதல் 17 வருடங்கள் வரை ஆகலாம். ஆனால், எனது உறவுகளுக்கு நீதி கிடைக்கும் என்றால் நான் செத்தாவது நீதியைப் பெற்றுத் தருவேன்” என்றார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11