தொடருந்து திணைக்கள ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிரடி தடை
இலங்கை தொடருந்து ஊழியர்கள் கடமை நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளரால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை தொடருந்து ஊழியர்கள் கடமை நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், தொடருந்து செயல்பாடுகள் தொடர்பான முக்கியத் தகவல்களைப் பகிர்வதையும் தடுக்கும் வகையில் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
தொடருந்து ஊழியர்களும் சில அதிகாரிகளும் கடமை நேரத்தில் மற்றும் தங்கள் கடமைகள் தொடர்பாக முக்கியத் தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவது குறித்த அவதானிப்புகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் இத்தகைய தகவல்களைப் பகிரங்கப்படுத்துவது, தொடருந்து சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கம் ஆகியவற்றைப் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று தொடருந்து திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.
புதிய சுற்றறிக்கையின்படி, தொடருந்து பொது முகாமையாளர், தொடருந்து உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை வெளித் தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து பொது மேலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அந்த சுற்றறிக்கையில், உள்ள அறிவுறுத்தல்களைப் புறக்கணித்துச் செயல்படும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்: பல்பொருள் அங்காடியின் பதிலடி News Lankasri