இறுதிப் போரில் கொலை செய்யப்பட்ட குழந்தைகள் : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வி
காசா சிறுவர்களுக்காக நிதி வழங்கும் அரசாங்கத்திற்கு இறுதிப்போரில் தமிழ் குழந்தைகள் கொலை செய்யப்படும் போது இரக்கம் வரவில்லையா என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30.05.2024) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
சர்வதேச நீதி கோரிய போராட்டம்
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
“சர்வதேச நீதியினைக் கோரி நாம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
எமது போராட்டங்களை தடுக்கும் விதத்தில் பல்வேறு அடக்குமுறைகள் இந்த அரசால் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும், நாம் நீதிக்கான எமது போராட்டங்களில் தொடர்ச்சியாக பயணிப்போம்.
இதேவேளை, காசாவில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட காசா நிதியத்திற்கு ஜனாதிபதியால் அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது.
இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இன்னொரு நாட்டிற்கு நன்கொடை வழங்கப்படுகின்றது. இது தமக்கான ஆதரவினை பெருக்குவதற்கான ஒரு அரசியல் நகர்வாகவே பார்க்க முடியும்.
தற்போது காசா சிறுவர்களுக்காக நிதி ஒதுக்குபவர்கள் இறுதிப் போரில் தமிழ் குழந்தைகளை கொலை செய்தார்கள். அப்போது அவர்களுக்கு இரக்கம் வரவில்லையா” என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |