சர்வதேசத்தை ஏமாற்றுவது போல எங்களை ஏமாற்ற முடியாது : முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
சர்வதேச நாடுகளை ஏமாற்றுவது போல காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும்
தாய்மாரின் கண்ணீரையும், அவர்களின் துயரங்களையும் நீங்கள் ஏமாற்றி வெற்றி பெற
முடியாது என மன்னார் (Mannar) மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இன்று (28.06.2024) முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
"மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக எமது உறவுகளை தேடி வீதியில் இறங்கி போராடி வருகிறோம்.
கவனயீர்ப்பு போராட்டம்
தற்போது ஒவ்வொரு மாதமும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் போராட்டங்களை முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் மன்னாரில் போராட்டம் முன்னெடுக்கிறோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட எம் பிள்ளைகள், உறவுகள் மீண்டும் எமக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் அரசை வலியுறுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.
தற்போது எமது உறவுகளை தேடி வீதியில் இறங்கி போராடி களைத்து போய் விட்டோம். இந்த அரசாங்கத்திடம் இருந்து நீதியை பெற்றுத் தருமாறு சர்வதேசத்திடம் நாங்கள் மண்டியிட்டு கேட்டு நிற்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்டோர்
இந்த அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்களினால் அழைத்துச் செல்லப்பட்ட உறவுகளையே நாங்கள் அவர்களிடம் கேட்கின்றோம். இலங்கை அரசாங்கத்தினால் எமக்கு நீதி கிடைக்காது என்ற நிலையிலேயே நாங்கள் சர்வதேசத்திடம் மண்டியிட்டு நிற்கின்றோம்.
14 ஆணை குழுக்களை மாறி மாறி வருகின்ற அரசாங்கம் இந்த நாட்டில் கொண்டு வந்துள்ளது. கடந்த 25ஆம் திகதி மன்னாரிற்கு உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினர் வருகை தந்திருந்தனர்.
இந்த நாட்டில் உண்மையும் ஒற்றுமையும் இருந்திருந்தால் தமிழ் மக்களுக்கு இவ்வாறான ஒரு துன்ப துயரம் வந்து இருக்காது. உங்களிடம் ஒப்படைத்த, குடும்பம் குடும்பமாக சரணடைந்த, வெள்ளை வான்களில் வந்து கடத்திச் சென்ற உறவுகளையே கேட்கின்றோம். யுத்தத்தில் இறந்து போன உறவுகளை கேட்கவில்லை.
பாதிக்கப்பட்ட எங்களை ஏமாற்றுவதற்காக புதிது புதிதாக
ஆணை குழுக்களை கொண்டு வர வேண்டாம். மற்றைய நாடுகளை ஏமாற்றுங்கள்.
அம்மாக்களின் கண்ணீரையும், அவர்களின் துயரங்களையும் நீங்கள் ஏமாற்றி வெற்றி
பெற முடியாது. இக்கண்ணீருக்கு நீங்கள் ஒரு நாள் பதில் சொல்லியே ஆக
வேண்டும்.
ஒவ்வொரு அம்மாக்களும் கண்ணீருடன் வீதியில் நிற்கின்றோம். இக்கண்ணீருக்கு இன்று இல்லை என்றாலும் ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |