வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்
வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றையதினம் (30.03.2024) வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
சர்வதேச நீதி கோரி போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
"குற்றமிழைத்த நாட்டில் எமக்கான நீதி கிடைக்கப்பெறாது. இதனால் சர்வதேச நீதியினைக் கோரி நாம் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம்.
எனவே சர்வதேசம் இனியும் கண்மூடித்தனமாக இருக்காமல் எமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும். எமது போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதற்காக பல அமைப்புக்கள் முற்படுகின்றன.
ஆகவே குற்றமிழைத்தவர்களை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்தி எமக்கான நீதியை வழங்கவேண்டும்.அதுவரையில் நாம் போராடிக்கொண்டே இருப்போம்" என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓ.எம்.பி கண்துடைப்பு நாடகம், சர்வதேச விசாரணையே
எமக்கு தேவை, 12 ஆணைக்குழுக்கள் அமைத்தும் பயன் இல்லை என்ற வாசகங்கள் தாங்கிய
பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களை எழுப்பியுள்ளனர்.
கிளிநொச்சி போராட்டம்
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று(30) முன்னெடுத்துள்ளனர்.
தமது பிள்ளைகளின் எதிர்பார்ப்பினை முன்னிலைப்படுத்தி தொடர் போட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 2594 நாட்கள் நிறைவடைகின்ற நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது கிளிநொச்சி A9வீதியில் ஆனந்தபுரத்தில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பதாகைகளையும், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் படங்களையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |