பேரினவாதம் விரிக்கும் வலையில் சிக்குமா சிறுபான்மை இனம்
இந்த இலங்கைத்தீவில் சிறுபான்மையினருக்கு எதிரான தனது கோர முகத்தை - கொடூரப் பண்பியல்பை - பெளத்த, சிங்களப் பேரினவாதம் மாற்றப் போவதில்லை. மீண்டும் மீண்டும் அதை உறுதிப்படுத்தி நிற்கின்றது ஆட்சிப்பீடம்.
கொரோனாத் தொற்றில் உயிரிழப்போரின் சடலங்களைப் புதைக்க- நல்லடக்கம் செய்ய - அனுமதிக்கப் போவதில்லை என்று பிடிவாதம் பிடித்த பேரினவாதம், ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸில் நெருக்குதல் உச்சத்தைத் தொட்டதும் அதைச் சமாளிக்கும் ஓர் எத்தனமாக நல்லடக்கத்துக்கு அனுமதிப்பதாக அறிவித்தது.
அதன் மூலம் இந்த நாட்டின் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் பேரினவாத மேலாண்மை வெறியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட திமிர்ப் போக்கு நடவடிக்கை முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டது.
ஆனாலும், மழை விட்டும் தூவானம் ஓயாதமை போல இதில் பேரினவாத மமதை இறங்கிப் போவதாக இல்லை என்பது இப்போது பிந்திய அறிவிப்பு மூலம் உறுதியாகியிருக்கின்றது.
கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை நல்லடக்கம் செய்வதானால் அது கிளிநொச்சி மாவட்டம், இரணை தீவில் மட்டும்தான் செய்ய முடியும் என்று நிபந்தனை போட்டு மீண்டும் முஸ்லிம்களினதும் கிறிஸ்தவர்களினதும் பண்பாட்டு விழுமியங்களுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது சிங்களப் பேரினவாத அரசு.
ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸில் சுருக்கு இறுக்கியதும், இஸ்லாமிய நாடுகளை வளைத்துப் போட்டு, சுருக்கை இளகப் பண்ணலாம் என்று நம்பிய கொழும்பு, இப்போது ஜெனிவா விடயம் கையை மீறி விட்டது என்று உணரத் தொடங்கியதும் பழையபடி முருங்கை மரத்தில் ஏறிவிட்டது.
கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைக்கவோ, நல்லடக்கம் செய்யவோ அனுமதிப்பதில்லை என்று முரட்டுத்தனமாகப் பிடிவாதம் பிடிக்கும் ஆட்சிப் பீடம் உலகில் இலங்கையில் மட்டும்தான் உள்ளது.
மருத்துவ, சுகாதார விஞ்ஞானம் மெத்தப் படித்த அறிவியலாளர்களைக் கொண்ட – இங்குள்ளதைப் போல நிலத்தடி நீரை நம்பியிருக்கின்ற - எந்த நாட்டிலும் இப்படிப் பேரினவாத அடிப்படையில் விஞ்ஞானபூர்வ முடிவை அறிவிக்கும் நிபுணர் குழு இல்லை.
பேரினவாத ஆட்சியாளரின் இனவெறித் திமிர்த்தனம் நிபுணத்துவக் குழுவின் பரிந்துரையாக இலங்கையில் மட்டும்தான் வெளிப்பட்டு நிற்கின்றது.
அத்தகைய நிபுணர் குழுவின் பெயரில் சடலங்களை நல்லடக்கம் செய்ய இவ்வளவு காலமும் தடை விதித்து விட்டு, இப்போது அந்தக் கட்டுப்பாட்டை நீக்கினால், அது அந்த நிபுணர் குழுவின் இதுவரை காலமான பரிந்துரை கேள்விக்குள்ளாகும் என்பதால் இப்படி ஒரு நடவடிக்கை - "விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்ற மாதிரி.
அதேசமயம், பெளத்த - சிங்களப் பேரினவாத வெறிப் போக்கின் அடக்குமுறையால் பெரிதும் அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து நிற்கும் சிறுபான்மையினரான தமிழர்களும், முஸ்லிம்களும் தங்களுக்கு எதிரான பேரினவாத அடக்கு முறையை எதிர்கொண்டு மீள் எழுவதற்கு தங்களுக்குள் ஒன்றுபட்டு செயற்படுவதே ஒரு மார்க்கம் என்பதை உணர்ந்து கொண்டு அந்த வழியில் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.
அதனை அண்மையில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் எழுச்சிப் பேரணியின் போது உலகம் கண்டது.
அதனால் எச்சரிக்கையும், எரிச்சலும் அடைந்துள்ள பேரினவாத ஆட்சிப்பீடம் சிறுபான்மை இனங்களுக்கு இடையான ஒற்றுமையை - புரிந்துணர்வை - இணக்க நிலையை – சிதறடிக்கச் செய்யும் கபட உள்நோக்கத்துடன்தான் இந்த இரணைதீவு நல்லடக்கத் திட்டத்தை அவிழ்த்து விட்டிருக்கின்றது என்பது வெளிப்படையானது.
இலங்கைத் தீவு மீது தான் கொண்டாடும் தனி உரிமையை -பாத்தியத்தை - நிலை நிறுத்துவதற்கு இந்தத் தீவின் பூர்வீகக் குடிகளான தமிழர்களையும் மற்றும் முஸ்லிம்களையும் அடக்கி, ஒடுக்கி, ஓரங்கட்டி, அவர்களின் உரிமைக் கோரிக்கையை சிதைத் தழித்து நிர்மூலமாக்குவதே ஒரே வழி எனக் கருதி, அந்தப் பேரினவாத வெறிச் சிந்தனையில் செயற்படும் ஆட்சிப் பீடம், அதற்காகத் தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிடும் கரவுத் திட்டத்தையும் அவிழ்த்து விடுகின்றது.
அதுதான் இரணைதீவில் மட்டும் கொவிட் ஜனாஸாக்களைப் புதைக்கலாம் என்ற உத்தரவு.
பேரினவாதத்தின் இந்த சதித்திட்டத்தை - பெரும் சூழ்ச்சியை - சம்பந்தப்பட்ட சிறுபான்மை இன மக்கள் புரிந்து கொண்டு, பேரினவாதம் விரிக்கும் வலையில் சிக்காமல், புத்திசாதுரியத்துடனும் மதிநுட்பத்துடனும் நடந்து இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும்.
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Tamilini அவர்களால் வழங்கப்பட்டு 03 Mar 2021 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Tamilini என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.