வெள்ளப்பெருக்கு அபாயம்! அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அவதானிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையுடனான வானிலை காரணமாக சில பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை தொடர்ந்து நீடிப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழைவீழ்ச்சியில் குறைவு காணப்பட்ட போதிலும், நில்வலா கங்கையின் நீரேந்துப் பகுதிகளின் சில இடங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மழை வீழ்ச்சி
இதனையடுத்து மகாவலி கங்கை - நீரேந்துப் பகுதிகளில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சியும், மகா ஓயாவின் நீரேந்துப் பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
நில்வலா கங்கை - அக்குரஸ்ஸ மற்றும் அதற்குக் கீழ்ப்பட்ட பகுதிகளிலும், கிங் கங்கையின் கீழ்ப்பகுதியான பத்தேகம மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் தொடர்ந்து சிறியளவிலான வெள்ள மட்டம் நீடிப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தாழ்நிலங்களின் சில பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் தொடர்ந்தும் காணப்படுகிறது.
களு கங்கை - நீரேந்துப் பகுதிகளில் நீர்மட்டம் குறைந்து வருவதுடன், மில்லக்கந்த மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் சிறியளவிலான வெள்ள மட்டத்திற்கு அண்மித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
களனி கங்கை - அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டங்களும் படிப்படியாகக் குறைந்து வருவதுடன், மகாவலி கங்கையின் நீரேந்துப் பகுதிகளில் நீர்மட்டம் அபாயகரமான முறையில் அதிகரிப்பதாகக் காட்டப்படவில்லை என தெரிவித்துள்ளது.
நீர்மட்டம் சடுதியாக உயர்வு
எனவே எதிர்வரும் நாட்களில் பெய்யக்கூடிய மழைவீழ்ச்சிக்கு ஏற்ப அவற்றின் நீர்மட்டம் சடுதியாக உயரக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமக ஆறுகளை அண்டிய தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்திற்கு ஏற்ப வான் கதவுகளைத் திறக்கும் நிலைமைகள் மாறுபடக்கூடும் என்பதால், உரிய நிறுவனங்கள் வெளியிடும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.